சென்னை:
உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
மேலும் இது தொடர்பாக 4 வாரத்திற்குள் பதில் தர தமிழக அரசு மற்றும் திமுகவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இம்மாதம் 24-ம் தேதியுடன் முடிகிறது. அதையடுத்து தமிழகத்தில் அக்டோபர் 17, 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை கடந்த மாதம் 25-ம் தேதி மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் வெளியிட்டார். அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
ஆனால், உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு சரிவர பின்பற்றவில்லை என்று திமுக சார்பில் ஆலந்தூர் பாரதி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அரசின் அறிவிப்புகளில் பழங்குடியின மக்களுக்கு சுழற்சி முறையில் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. சென்னையில் 200 வார்டுகளில் ஒன்றுகூட பழங்குடியினருக்காக ஒதுக்கப்படவில்லை. இது அரசியல்அமைப்பு சட்டத்திற்கும், பஞ்சாயத்துராஜ் சட்டத்திற்கும் எதிரானது. ஆகவே உள்ளாட்சிதேர்தல் குறித்து தமிழகஅரசு பிறப்பித்த அரசாணைகளை ரத்துசெய்துவிட்டு சுழற்சி முறையை பின்பற்றி முறையாக இடஒதுக்கீட்டு பின்பற்ற வேண்டும்” என்று அந்தமனுவில் ஆர்.எஸ். பாரதி குறிப்பிட்டிருந்தார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் இம்மனுமீது விசாரணை நடத்தி, உள்ளாட்சித் தேர்தலையே ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த தடையை எதிர்த்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சென்னை ஐகோர்ட்டில் மேற்முறையீடு செய்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. இதனை விசாரித்த நீதிபதி பார்த்திபன் உள்ளாட்சி தேர்தல் ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டார்.
மேலும் இதுகுறித்து, தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு தேர்தல் ஆணையம், திமுக ஆகியவற்றுக்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டார்.
இதன் காரணமாக உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளி போகும் நிலை உருவாகி உள்ளது.