டொராண்டோ: கனடா நாட்டில் 45 வயது பெண் ஒருவர் தனது செல்ஃபோனில் பதிந்து வைக்கப்பட்ட ஒரு சத்தமான வாத்திய இசையின் உதவியால் மலைச் சிங்கத்திடமிருந்து உயிர் தப்பினார். அவருடன் சென்ற நாயும் உயிர் தப்பியது.

டீ கேலன்ட் என்ற அந்தப் பெண்மணி, தனது வீட்டிலிருந்து அவ்வப்போது நடைபயிற்சிக்காக வெளியில் செல்வது வழக்கம். அப்படி ஒருநாள் செல்லும்போது, அவர் எதிர்பாராமல் மலைச் சிங்கம் ஒன்றை சந்திக்க நேரிட்டது.

மலைச் சிங்கம் இவரை நோக்கி நகர்ந்து வரவே, கூச்சலிட்டு கைகளை ஆட்டி அது நகர்வதை நிறுத்தியுள்ளார். பின்னர் அதை அங்கிருந்து விரட்டுவதற்கு முயன்றும், அந்த மலைச் சிங்கம் நகராமல் அவரையும் நாயையும் முறைத்துப் பார்த்துக்கொண்டு இருந்துள்ளது.

அவ்விடத்தில் வேறு யாருமில்லை. எனவே, சமயோசிதமாக யோசித்த அப்பெண், தனது செல்ஃபோனில் பதிந்து வைக்கப்பட்டிருந்த சத்தமான ஒரு வாத்திய இசையை அதிக ஓசையுடன் ஒலிக்க விட்டார். அந்த சத்தம் கேட்டு மிரண்ட மலைச்சிங்கம் மீண்டும் புதருக்குள் ஓடிவிட்டது.

பின்னர், தான் வீடு திரும்பும்வரை அந்த இசையை ஒலிக்கவிட்டபடியே நடந்தார். தனது நாயையும் அருகிலேயே வைத்துக்கொண்டார். மலைச் சிங்கத்தை அவ்வளவு அருகில், அவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்துள்ளார் அப்பெண்மணி.