வரும் ஆவணி அவிட்டம் (ஆகஸ்ட் 7) அன்று பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டத்தை அறிவித்திருக்கிறது தந்தை பெரியார் திராவிடர் கழகம். இக் கழகத்தின் தலைவர் கோவை ராமகிருட்டிணன் நமது patrikai.com இதழுக்கு அளித்த பேட்டியில், “பூணூல் அணிவதன் மூலம் பிறரைவிட தாங்கள் உயர்ந்தவர் என்று பார்ப்பணர்கள் கருதுகிறார்கள். ஆகவேதான் இந்த போராட்டம்” என்றார். மேலும், “விலங்குகளில் கீழ் நிலையாக நினைக்கப்படும் பன்றிகளுக்கு பூணூல் அணிவிப்பதன் மூலம் அவற்றை உயர்த்துகிறோம்” என்று நகைச்சுவையாகவும் தெரிவித்தார்.
பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டத்துக்கு கண்டனம் தெரிவித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர். மேலும், இந்த போராட்டம் குறித்து, “ஆட்சியைக் கலைக்காமல் விடமாட்டார்கள் போலும்” என்றும் குறப்பிட்டிருக்கிறார்.
இந்த நிலையில் அவருடன் தொடர்புகொண்டு பேசினோம்.
ஆவேசத்துடன் தனது கருத்துக்களை தெரிவிக்க ஆரம்பித்தார் எஸ்.வி.சேகர்:
”இவர்களுக்கு வேறு பிழைப்பு கிடையாது. பெரியாருக்கும் சரி அவர் தொண்டர்கள் என சொல்லிக்கொள்பவர்களையும் சரி.. பிராணமர்கள்தான் வாழ வைக்கிறார்கள்.
ஒவ்வொரு மதத்திலும் ஒரு பழக்கம் இருக்கிறது.. ஒவ்வொரு சாதியிலும் ஒரு பழக்கம் இருக்கிறது. பூணூல் அணிவிப்பது என்பது ஒரு சடங்கு.
இன்னொரு விசயம்… பிராமணர்கள்தான் பூணூல் அணிகிறார்கள் என்று அவர்கள் முட்டாள்த்தனமாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். பிராமணர் அல்லாத செட்டியார், ஆசாரி போன்ற சாதியினரும் பூணூல் அணிகிறார்கள்.
தவிர, பூணூல் அணிவது என்பது ஒரு தந்தை மகனுக்கு செய்யும் சடங்கு. இவர்கள் பன்றிக்கு பூணூல் போடுகிறார்கள் என்றால் இவர்களும் பன்றிகள்தான்.
ஸ்ரீரங்கத்தில் கோயில் வாசலில் பெரியார் சிலை இருக்கிறதே என்று கேட்கிறார்கள்… கோயில் வாசலில் பிச்சைக்காரன் கூடத்தான் இருக்கிறான். அது பற்றி ஏன் பேசணும் என்று கேட்டேன்.
இப்படி போராடுபவர்கள் இந்த (மாநில) ஆட்சியை கவிழ்க்கும் வேலையைச் செய்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் சமுதாயத்தில் சட்டம் ஒழுங்கைக் கெடுக்கும் வேலையை செய்கிறார்கள் இவர்கள். இது ஆட்சிக்குக் கேடுதானே?
தவிர, இவர்களின் போராட்டத்துக்கு தி.மு.க. ஆதரவா என்பதை விளக்க வேண்டும். மற்ற கட்சிகளும் இது குறித்து தெளிவு படுத்தவேண்டியது அவசியம்.
கமல்ஹாசனை பற்றி பேசினால் தங்களது போட்டோ வரும் என்று பல கட்சியினரும் பேசுகிறார்களே.. இந்த போராட்ட அறிவிப்பு பற்றி ஏன் கருத்து சொல்லவில்லை?
மக்களிடம் ஓட்டுகேட்டு வரும் கட்சிகள் இந்த போராட்டத்தைக் கண்டிக்கவேண்டும். ஏனென்றால் ஒரு ஓட்டில் கூட வெற்றி தோல்வி ஏர்படும். நாலு கோடி வாக்காளர்கள் இருந்தாலும் பத்து பேர் கூட தேர்தல் முடிவை தீர்மானிக்க முடியும்.
அந்த ஆட்கள், அனுமதி இன்றி கார்ப்பரேசன் சுவரில் “போராட்டம்” என்று எழுதி வைத்திருக்கிறார்கள். கார்ப்பரேசன் விளக்குக் கம்பத்தில் நாய்கள், அனுமதி இன்றி சிறுநீர் கழிக்கின்றன. அது போலத்தான் இவர்கள்.
இது குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் விஸ்வநாதன் அவர்களுக்கு நேற்றே அந்த சுவர் விளம்பர புகைப்படத்துடன் புகார் அனுப்பியிருக்கிறேன். மாநகராட்சிக்கும் தகவல் அளித்திருக்கிறேன்.
அந்த விளம்பரம் அழிக்கப்பட வேண்டும். இல்லாவி்ட்டால் சட்ட ரீதியான நவடிக்கை மேற்கொள்ள வேண்டிவரும்.
நாய்க்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன், பன்றிக்கு பூணூல் போடுகிறேன் என்பதெல்லாம் மூட நம்பி்க்கை இல்லையா? . தன்னைத்தானே செருப்பால் அடித்துக்கொள்வது போலத்தானே இது?
பூணூலை நான் என் தோளில் போட்டுக்கொள்கிறேன். இதில் இவர்களுக்கு என்ன வந்தது?
இவர்கள் வீரம் தெரியாதா… பிராணாள் மெஸ் என்று இருந்தால் எதிர்ப்பார்கள். செட்டியார் மெஸ், தேவர் மெஸ், ஆச்சி மசாலா என்று இருக்கிறதே.. அவற்றை இவர்களால் தொட முடியுமா?
ஒரு பேச்சுக்காக கேட்கிறேன்.. பன்றிக்கு குல்லா போடுகிறேன்.. சுன்னத் செய்கிறேன் என்று அறிவிக்க முடியுமா..?
பயம் இருக்கிறது அல்லவா? அந்த வகையில் இஸ்லாமிய மக்களை மிகப் பெருமையோடு நினைத்துப் பார்க்கிறேன். தங்கள் மதத்தை யாரேனும் கொச்சைப்படுத்தினால் அவர்கள் வெகுண்டெழுவார்கள். அவர்களை பாராட்டுகிறேன்.
என் மகன் அஸ்வின் நண்பர் ஷேக் என்ற இஸ்லாமிய நண்பர். மயிலை தொகுதியில் நான் போட்டியிட்டபோடு, அந்த நண்பர், முட்டுக்காடு தர்காவில் மந்திரித்து கொடுத்த தாயத்தை எனது கையில் கட்டினார். அதை நான் அறுந்துவிழும்வரை கட்டியிருந்தேன். இப்படி நான் சாதி மத வேறுபாடு பார்ப்பதே இல்லை. கடவுள் நம்பிக்கை உண்டு. அவ்வளவுதான்.
சாதி மறுப்பு சாதி மறுப்பு என்கிறார்களே.. இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சாதி சான்றிதழ்களை கிழித்துப்போட இவர்கள் தயாரா?
இப்போது பிராமண எதிர்ப்பு என்கிறார்களே… இதே பிராமணத்தி கால்லதானே இத்தனை காலம் விழுந்து கிடந்தார்கள்?” என்று ஆவேசமாய் சொல்லி முடித்தார் எஸ்.வி.சேகர்.