சென்னை: காங்கிரஸ் இல்லாமல் திமுக கூட்டணி ஆட்சிக்கு வர முடியுமா? காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் நெருங்கிய நண்பரும், டேட்டா பகுப்பாய்வுத் துறையின் தலைவராக உள்ள பிரவீன் சக்ரவர்த்தி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
60 ஆண்டுகளாக தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத நிலையில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்க்கு அதிக தொகுதிகள், ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளக் கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் நிர்வாகியும், ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பருமான பிரவீன் சக்கரவத்தி அண்மை காலமாக தவெக தலைவர் விஜய் குறித்து தெரிவித்து வரும் கருத்துகள் கூட்டணிக்குள் சலசலப்பை உருவாக்கி வருகிறது.
ஏற்கனவே பிரவீன் சக்ரவர்த்தி ஏற்கனவே தவெக தலைவரை சந்தித்து பேசியது சர்ச்சையான நிலையில், தொடர்ந்து, திமுக அரசை விமர்சிக்கும் வகையில், “தமிழகத்தின் கடன் குறித்த அவரது சர்ச்சை பதிவு கூட்டணிக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிரவீன் சக்ரவர்த்திக்கு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்பட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில், கூட்டணி கட்சி தலைவர்களும் வசைபாடினர். ஆனால், விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், கூட்டணி குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் இது என கூறி, பிரவீன் சக்ரவர்த்திக்கு ஆதரவாக பதிவிட்டார். இந்த நிகழ்வுகள் விவாதப்பொருளாக மாறி உள்ளன.
இந்த நிலையில், தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், எனது பதிவின் மீதான சர்ச்சை, சில தமிழக காங்கிரஸ் தலைவர் கள் தங்கள் அரசியல் பிழைப்பிற்காக தி.மு.க-வை எவ்வளவு கடுமையாக சார்ந்து இருக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்து கிறது” என்று கடுமையாக விமர்சித்துள்ளதுடன், காங்கிரஸ் இல்லாமல் திமுக கூட்டணி ஆட்சிக்கு வர முடியுமா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தொழில்முறை பிரிவுத் தலைவராகவும், டேட்டா பகுப்பாய்வுத் துறையின் தலைவராகவும் உள்ள பிரவீன் சக்ரவர்த்தி, இந்த சர்ச்சை, காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பங்கள், தி.மு.க உடனான உறவு மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உடனான சந்திப்பு குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தின் கடன் குறித்த உங்கள் சமீபத்திய பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகத் தேர்தலுக்கு முன்னதாக இத்தகைய கருத்துக்களைத் தெரிவிக்க உங்களைத் தூண்டியது எது? என்ற கேள்விக்கு பதில் கூறியவர்,
நான் சொன்னதில் ஏதேனும் உண்மைக்கு மாறாக இருந்ததா? நான் நான்கு புள்ளிகளைக் குறிப்பிட்டேன். இவை அனைத்தும் ரிசர்வ் வங்கியின் மாநில நிதி அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டவை. பீகார், கர்நாடகா அல்லது மகாராஷ்டிரா என மாநிலங்களின் நிதி நிலை குறித்து நான் எப்போதும் கருத்து தெரிவித்து வருகிறேன். எனவே, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தின் கடன் உயர்வு மிகத் தெளிவாகத் தெரிந்தபோது அதைக் குறிப்பிட்டேன். இதற்கும் தேர்தலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. என்றார்.
பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்புவதற்கு எதிராக நீங்கள் முன்னரே பேசியிருக்கிறீர்கள். ஆனால் தமிழக கடன் குறித்த உங்கள் கருத்து கூட்டணிக் கட்சிகளிடமிருந்து விமர்சனங்களைப் பெற்றுள்ளதே? என்ற கேள்விக்கு விவரமாக பதில் அளித்தார்.
இது காங்கிரஸ் கட்சியின் தாராளவாத விழுமியங்களுக்கும், ராகுல் காந்தி முன்னெடுக்கும் கலாச்சாரத்திற்கும் ஒரு சான்று என்று கூறியவர், நான் மட்டுமல்ல, சிதம்பரம் போன்றவர்களும் பழைய ஓய்வூதியத் திட்டம் அல்லது நலத்திட்டங்களுக்கான அதிகப்படியான செலவுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
நாங்கள் ஏதேனும் தவறான தகவல்களைச் சொன்னால் மட்டுமே கட்சித் தலைமை அதை எதிர்க்கும். ஆனால், மற்றபடி இத்தகைய சுதந்திரத்தை வழங்குவதில் எங்கள் தலைமை மிகவும் தாராளமாக இருக்கிறது.
ரிசர்வ் வங்கி அறிக்கையிலிருந்து கடன் அளவைச் சுட்டிக்காட்டியதற்காக என்னை நீக்க வேண்டும் என்று கூட்டணிக் கட்சியினர் சிலர் சொல்வது சிரிப்பை வரவழைக்கிறது. இது சில கட்சிகளின் சகிப்புத்தன்மையற்ற தன்மையைக் காட்டுகிறது. மேலும், எனது பதிவு 2010 முதல் 2025 வரையிலான 15ஆண்டுகாலப் போக்கைப் பற்றிப் பேசுகிறது.
இந்த (தி.மு.க) அரசு கடந்த நான்கு ஆண்டுகளாகத்தான் ஆட்சியில் உள்ளது. பிறகு ஏன் இது இந்த அரசை மட்டுமே விமர்சிப்பதாகக் கருதப்படுகிறது?
வெறும் எண்களை மட்டும் ஒப்பிட முடியாது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறதே? தமிழகப் பொருளாதாரம் விரிவடைந்து வருகிறது, கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் அதற்கு உண்டு. நிதிப்பற்றாக்குறையும் வரம்பிற்குள்ளே தான் உள்ளது? என்ற நெறியாளரின் கேள்வுக்கு,
தமிழ்நாடு மோசமாகச் செயல்படும் மாநிலம் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. நான் கடனைப் பற்றி மட்டுமே கருத்துத் தெரிவித்தேன். கடன்-உற்பத்தி விகிதத்தை (Debt to GDP) எடுத்துக்கொண்டால், 2010-இல் தமிழகம் மற்றும் கர்நாடகாவின் விகிதம் கிட்டத்தட்ட சமமாக இருந்தது. ஆனால் 2025-இல் தமிழகத்தின் கடன் விகிதம் 30% ஆக உள்ளது, கர்நாடகாவோ 22% இல் மட்டுமே உள்ளது. தமிழகத்தின் வட்டிச் சுமை பஞ்சாப் மற்றும் ஹரியானாவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளது. எனது பதிவின் மூலம் தமிழகத்தின் சராசரி இளைஞர்கள் கடன் குறித்த விழிப்புணர்வைப் பெற்றுள்ளது ஒரு நேர்மறையான விஷயம்.
தமிழக கடன் விஷயத்தில் தமிழகத்தின் கடனை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிட்டது உங்கள் கூட்டாளிகளைக் கோபப்படுத்தி உள்ளதே என்ற கேள்விக்கு,
உபி-யுடன் ஒப்பிட்டதற்குக் காரணம், உபி மிகவும் மோசமாக நிர்வகிக்கப்படும் மாநிலம் என்று சொல்வதற்காகத்தான். அத்தகைய உபி-யை விட தமிழகத்தின் கடன் அதிகம் என்பது வருத்தமளிக்கிறது என்பதால்தான் அதைச் சொன்னேன். 2025 மார்ச் அறிக்கையின்படி தமிழகம் முதலிடத்திலும் உபி இரண்டாம் இடத்திலும் உள்ளது. இதைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம். நான் தொழில்நுட்ப ரீதியாக மட்டுமே சிந்தித்தேன், அரசியல் ரீதியாக அல்ல. இதற்காக என்னை “மறைமுக சங்கீ” என்று சொல்வது மிகவும் முதிர்ச்சியற்ற செயலாகும்.
திமுக அரசு மீதான விமர்சனத்துக்கு உங்கள் கட்சிக்குள் இதற்கு என்ன பதில் கிடைத்தது? என கேள்விக்கு.
டெல்லியிலிருந்து எந்தப் பதிலும் இல்லை. தமிழகத்தில் உள்ள சில காங்கிரஸ் தலைவர்கள் அரசியல் ரீதியாக முழுமையாக தி.மு.கவைச் சார்ந்து இருக்கிறார்கள். மற்ற மாநிலங்களில் எங்கள் கட்சி அல்லது அரசுக்கு எதிராக நாங்கள் கருத்துத் தெரிவிக்கும்போது எவரும் இப்படித் தீவிரமாக எதிர்ப்பதில்லை. ஆனால் தமிழகத்தில் உள்ள சில காங்கிரஸ் எம்.பி.-க்களும் தலைவர்களும் திடீரென தங்களைப் பொது நிதிப் பொருளாதார வல்லுநர்களாக நினைத்துக்கொண்டு கருத்துத் தெரிவிக்கிறார்கள். இது அவர்கள் தி.மு.கவை எவ்வளவு சார்ந்து இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது என்றார்.
விஜய் உடனான உங்கள் சந்திப்பு மற்றும் தி.மு.க கூட்டணியை முறித்துக்கொண்டு அவருடன் இணைய வேண்டும் என்ற விருப்பம் குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பிய நெறியாளருக்கு அளித்த பதிலின்போது,
விஜய் உடனான சந்திப்பு குறித்து நான் எந்தக் கருத்தும் சொல்ல மாட்டேன். ஆனால், தமிழக காங்கிரஸ் தொண்டர்களின் கோரிக்கையைச் சொல்கிறேன் – அவர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான இடங்கள் வேண்டும், ஆட்சியில் அதிகாரப் பங்கீடு வேண்டும், மற்றும் அதிக மரியாதை வேண்டும். 60 ஆண்டுகளாக காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியில் இல்லை. 75% க்கும் அதிகமான தொண்டர்கள் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனர்.
மகாராஷ்டிரா, பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு பெறும்போது, தமிழகத்தில் மட்டும் ஏன் இருக்கக்கூடாது? தி.மு.க டெல்லியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பங்கு வகித்தது. எனவே, காங்கிரஸ் அமைச்சர்கள் ஆட்சியில் இருந்தால் அது கட்சி வளர உதவும். காங்கிரஸ் தொண்டர்கள் 60 ஆண்டுகள் பொறுத்திருந்தார்கள், இப்போது இதைக் கேட்பதற்கான நேரம் வந்துவிட்டது என அதிகாரப் பகிர்வு குறித்து மீண்டும் வலியுறுத்தினார்,
தமிழ்நாட்டில், காங்கிரஸ் ஒரு சிறிய கட்சி (fringe player) என்பதால் அதிக இடங்கள் மற்றும் அதிகாரப் பங்கீடு கேட்பது நியாயமானதா? என்ற கேள்விக்கு
இத குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும். காங்கிரஸ் ஒரு சிறிய கட்சி என்பது விசித்திரமான வாதம். காங்கிரஸின் வாக்குச் சதவீதத்தை நீக்கி விட்டு, இந்தக் கூட்டணி ஆட்சிக்கு வர முடியுமா என்று பார்க்கட்டும்? பாஜக அரசியலை எதிர்க்கும் ஒரு கட்சி வேண்டும் என்று தமிழக வாக்காளர்கள் விரும்புகிறார்கள். எந்தச் சூழ்நிலையிலும் பாஜகவை எதிர்க்கும் ஒரே நம்பிக்கைக்குரிய கட்சி காங்கிரஸ் என்று அவர்கள் அறிவார்கள். இடங்களை விட வாக்குகளைப் பாருங்கள், ஏனெனில் காங்கிரஸ் வாக்குகளைப் பெற்றுத்தான் தி.மு.க எம்.எல்.ஏ.-க்களும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என கூறினார்.
அடுத்து நெறியாளர், தி.மு.க உங்கள் கோரிக்கைகளை ஏற்கவில்லை என்றால் காங்கிரஸின் அடுத்த ஆப்ஷன் என்ன? என்ற கேள்விக்கு,
அது தலைமையின் முடிவு. எங்களின் கோரிக்கைகளை எந்தக் கட்சி ஏற்கத் தயாராக இருக்கிறதோ, அதுவே எங்களின் இயல்பான கூட்டாளியாக இருக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என்றார்.
தவெக தலைவர் விஜய் உடனனா சந்திப்பு குறித்து எழுப்பப்பட்டகேள்விக்கு பதில் கூறியவர், “தமிழகத்தில் விஜய் அரசியல் சக்தியாக மாறிவிட்டார். அதனை யாராலும் மறுக்க முடியாது. அவரை நடிகர் என்பதற்காக மக்கள் பார்க்க வரவில்லை. மாறாக விஜய்யை மக்கள் அரசியல் தலைவராகப் பார்க்கின்றனர். அதனால் தான் அவரைப் பார்ப்பதற்காக கொத்து கொத்தாக மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர். நான் விஜய்யை சந்தித்து பேசியது உண்மை தான். ஆனால் அந்த சந்திப்பில் என்ன பேசினோம் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது.
தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சி, அதிகாரத்தில் இல்லை. அதனால் வரக்கூடிய தேர்தலில் அதிக சீட்டு, ஆட்சியில் பங்கு வேண்டும், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் எண்ணமாக உள்ளது. இது தான் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தின் நலனுக்கு நன்மை தரும். என்னுடைய கருத்தில் சில மாநில நிர்வாகிகள் உடன்படாமல் இருக்கலாம். காங்கிரஸ் கட்சி ஜனநாயக ரீதியிலானது. இதில் கருத்து தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் கூட்டணி குறித்து முடிவெடுப்பது தலைமை மட்டும் தான். ஊட்டிவிடும் கையை யாரும் கிள்ளி விடமாட்டார்கள். அந்த வகையில் திமுக கூட்டணியை ஆதரிப்பவர்களுக்கு அவர்களது தொகுதியில் திட்டங்கள் நிறைவேறுவுதற்காகவோ, அல்லது அவர்கள் மீது இருக்கும் வழக்குக்காகவோ ஆதரிக்கலாம்”.
இவ்வாறு கூறினார்.
‘விஜயை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை..! காங்கிரஸ் பிரவீன் சக்ரவர்த்தி விளக்கம்
தமிழ்நாட்டின் கடன் சுமை: பிரவீன் சக்கரவர்த்தியை சாடிய காங்கிரஸ் தலைவர்கள்…
[youtube-feed feed=1]அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்! ஜோதிமணி குமுறல்…