சென்னை,
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தெரிவித்து உள்ளது.
கடந்த வாரம் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், போராட்டத்துக்கு தடை விதிப்பதாகவும் உயர்நீதி மன்றம் எச்சரித்திருந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், ஏற்கனவே போராட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்றும் கூறி உள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் இன்று 5வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தொழிற்சங்கங்கள் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம், நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக மாற்றலாம் என்றும், வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்தியது.
அதைத்தொடர்ந்து தொழிலாளர்களின் போராட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேலும், தொழிலாளர் அமைப்புகள் 14 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் கொடுக்காமல் போராட்டம் நடத்துவதாகவும், முன்னறிவிப்பு இல்லாத ஸ்டிரைக்கை ஏற்க முடியாது என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என்ற உத்தரவை திரும்பப் பெறுகிறேன் என்ற தலைமை நீதிபதி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்காமல் அவர்களை உடனடி பணி நீக்கம் செய்யக்கூடாது என்றும் அரசுக்கு உத்தரவிட்டது.