பெங்களூரு:
காவிரி தொடர்பான இன்றைய வழக்கில், தமிழகத்திற்கு தர வேண்டிய 4 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா கொடுக்க வேண்டும் இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என உச்சநீதி மன்றம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா மீண்டும் அடாவடி செய்துள்ளார். கர்நாடக அணைகளில் போதுமான அளவு நீர் இல்லாத நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை என்று கூறி உள்ளார்.
ஏற்கனவே இதுபோல பலமுறை உச்சநீதி மன்றம் உத்தரவிட்டும், கர்நாடகா தண்ணீர் தர மறுப்பதும் வாடிக்கை யாகி வருகிறது. இந்நிலையில் உச்சநீதி மன்றத்தின் இன்றைய உத்தரவையும் கர்நாடக காங்கிரஸ் அரசு அலட்சியப்படுத்தி, தண்ணீர் தர முடியாது என்று கூறி உள்ளது.
இந்த விவகாரத்தில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு மீண்டும் மீண்டும் கேலிக்குறியதாகவும், கேள்விக்குறியதாகவும் ஆக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் உயரிய அமைப்பாக உள்ள உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை மத்திய பாஜக அரசும் மதிக்காமல் காலம் தாழ்த்தி வரும் நிலையில், கர்நாடக காங்கிரஸ் அரசும் அதே வழியை பின்பற்றி வருவது ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.
உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகளை இதுபோன்று ஒவ்வொரு மாநில அரசுகளும் எதிர்க்க முன்வந்தால்… நாட்டின் அரசியலமைப்பு கேள்விக்குறியாகி விடும் நிலைமையே ஏற்படும்…
காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு நீர்தர உத்தரவிட்ட உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீலும் கூறி உள்ளார்.