தஞ்சாவூர்: 15 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஊராட்சி மன்ற தலைவர், கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளு.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா காடுவெட்டிவிடுதி ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் மு. வேலன். காடுவெட்டி விடுதி ஊராட்சியை முதல் முதலாக (தனி) தொகுதியாக அறிவித்தப்போது 1996ம் ஆண்டு சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
முதல் நான்கு வருடங்கள் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றிய வேலன், நான்காவது வருட துவக்கத்தில் (2000ம் ஆண்டு, “அதிகாரிகள் ஆடிட்டிங் கணக்கு பார்க்க வரசொன்னார்கள்” என்று தெரிவித்து கோப்புகளுடன் சென்றார். அதன் பிறகு அவரைக் காணவில்லை.
இது குறித்து முவேலனின் மகன் முத்துக்குமார், திருவோணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித பலனும் இல்லை.
இந்த நிலையில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பொது மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் தனது தந்தையை கண்டுபிடித்துத் தரும்படி, முத்துக்குமார் மனு அளித்துள்ளார்.
இது குறித்து, “1996ம் ஆண்டுதான் காடுவெட்டிவிடுதி ஊராட்சி தலித் தொகுதியாக அறிவிக்கப்பட்டது. அப்போது ஆதிக்க சாதியைச் சேர்ந்த செல்வாக்கான பிரமுகர்கள் சிலர், வேலனை தலைவர் பதவிக்கு நிறுத்தி வெற்றி பெற வைத்தனர். அதோடு தாங்கள் விரும்பியபடி வேலனை செயல்பட வைத்தனர். எழுதப்படிக்கத் தெரியாத வேலனும், அவர்களது சொல்லுக்கு கட்டுப்பட்டு நடந்தார். ஆகவே ஊராட்சி நிதியில் பலவதி குளறுபடிகள் நடந்தன. இந்த நிலையில்தான் வேலன் காணாமல் போயிருக்கிறார். ஆகவே அசெல்வாக்கான பிரமுகர்களால் வேலனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம்” என்றும் ஒரு தகவல் உலவுகிறது.
வேலனின் மகன் முத்துக்குமாரை தொடர்புகொண்டு இது குறித்து கேட்டோம். அவர், “ஊராட்சி மன்ற தலைவராக இருந்த என் தந்தை வேலன் காணாமல் போய் 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவருக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை. அவர் உயிருடன் இல்லை என்றால் அதற்கான சான்றிதழையாகவது தாருங்கள் என்பதுதான் எங்கள் கோரிக்கை” என்பதோடு முடித்துக்கொண்டார்.
ஒரு ஊராட்சி மன்ற தலைவர் காணாமல் போய் 15 வருடங்களாகியும் முடிவு தெரியாதது தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.