காற்றினால் கொரோனா வைரஸ் பரவ சாத்தியக்கூறுகள் உள்ளது என்பது தெரிய வந்துள்ள நிலையில், கொசுக்களால் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  1,46,33,037  ஆக அதிகரித்துள்ளது.  நேற்று (19ந்தேதி)  மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,296 அதிகரித்து மொத்தம் 6,08,539 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 87,30,163 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் (20ந்தேதி காலை 6 மணி நிலவரம்) 59876 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதற்கிடையில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளை சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.  மற்றொருபுறம், நோய் பரவுவதற்கான வழிகளை கண்டறியும் பணிகளிலும் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா காற்றின் மூலம் பரவ வாய்ப்பு இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் சில மாதங் களாக கூறி வந்த நிலையில், பல்வேறு நாடுகளைச்சேர்ந்த  ஆராய்ச்சியாளர்கள், கொரோனா காற்றின் மூலமும் பரவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். தற்போது இந்த ஆய்வை, உலக சுகாதார ஆய்வு நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளது. சிலவகை கொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவும் என்று தெரிவித்துஉள்ளது.
இந்த நிலையில்,  கொசுக்களின் மூலம் வைரஸ் பரவுமா என என்பது தொடர்பாகவும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தன. இதில் கொசுக்களின் மூலம் கொரோனா பரவுவதற்கான சாதியக்கூறுகள் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. இருப்பினும் இது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு இல்லை என அமெரிக்க கன்சாஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கொசு மூலம் கொரோனா பரவுமா என்பதற்காக  சேகரிக்கப்பட்ட 277 மாதிரிகளை வைத்து சோதனை செய்ததில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரை கடித்த கொசு சாதாரண மனிதரை கடித்தாலும் அது வைரஸ் பாதிப்பை உண்டாக்காது என தெரியவந்துள்ளது.
தற்போது உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல்  தீவிரமான நிலைமைகளிலும் கூட கொரோனா வைரஸ், கொசுக்களின் மூலம் பரவாது என்பது நிரூபனம் ஆகியுள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.