‘ஆண்கள் கர்ப்பமாக முடியுமா?’ என்ற கேள்வியை அமெரிக்க செனட் விசாரணையில் குடியரசுக் கட்சி செனட்டர் ஜோஷ் ஹாவ்லி எழுப்ப, அதற்கு நேரடியான பதில் தராமல் மருத்துவர் நிஷா வர்மா அளித்த விளக்கம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அபார்ஷன் மாத்திரை (மிஃபெப்ரிஸ்டோன்) பாதுகாப்பு தொடர்பாக நடைபெற்ற செனட் சுகாதாரக் குழு விசாரணையில்தான் இந்த சம்பவம் நடந்தது. டெமோகிராட் தரப்பின் சாட்சியாக அழைக்கப்பட்ட அட்லாண்டாவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நிஷா வர்மாவிடம், “ஆண்கள் கர்ப்பமாக முடியுமா?” என்று ஹாவ்லி மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வர்மா, “நான் பல்வேறு அடையாளங்களை கொண்ட நோயாளிகளை சிகிச்சை செய்கிறேன். பெண்களையும், பெண்களாக அடையாளப்படுத்திக் கொள்ளாதவர்களையும் நான் கவனிக்கிறேன்” என்று கூறினார். ஆனால், ஆம் அல்லது இல்லை என்ற நேரடி பதிலை அவர் தரவில்லை. இந்த கேள்வி அரசியல் நோக்கத்துடன் கேட்கப்படுவதாகவும், இது பிரிவினையை உருவாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து ஹாவ்லி, “உயிரியல் உண்மையை நிறுவுவதற்காகத்தான் இந்த கேள்வி. அரசியல் அல்ல, அறிவியல்தான் முக்கியம்” என்று கூறி, இறுதியில் “கர்ப்பம் அடைவது பெண்கள்தான், ஆண்கள் அல்ல” என்று பதிவு செய்தார்.
இந்த உரையாடல் வீடியோ புதன்கிழமை வெளியான சில மணி நேரங்களிலேயே 34 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. பாலின அடையாளம், இனப்பெருக்க உரிமைகள் மற்றும் அபார்ஷன் அரசியல் குறித்து அமெரிக்காவில் மீண்டும் தீவிர விவாதத்தை இது கிளப்பியுள்ளது.
டாக்டர் நிஷா வர்மா யார்?
டாக்டர் நிஷா வர்மா, அட்லாண்டாவைச் சேர்ந்த மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர். எமோரி மருத்துவக் கல்லூரியில் துணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 2021 முதல் மருத்துவ சேவையில் ஈடுபட்டு வரும் அவர், அபார்ஷன் சேவைகள் மற்றும் கொள்கை சார்ந்த பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
[youtube-feed feed=1]