அமெரிக்காவிடம் இருந்து நிதிபெறும் கனடா அதற்கு பதிலாக அமெரிக்காவின் 51வது மாநிலமாக சேர்ந்து கொள்ளலாம் என்று அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப் கடந்த சில வாரங்களுக்கு முன் கூறியிருந்தார்.
அதிபர் டிரம்பின் இந்த பேச்சு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ-வை உசுப்பேற்றியதை அடுத்து டிரம்ப் – ட்ருடோ இடையே வார்த்தை போர் ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று இங்கிலாந்து செல்லவுள்ள ஜஸ்டின் ட்ருடோ அங்கு மன்னர் சார்லஸ் III சந்தித்து இதுகுறித்து முறையிட உள்ளார்.
காமன்வெல்த் நாடுகளில் ஒன்றான கனடாவுக்கு மன்னராக சார்லஸ் III உள்ள நிலையில் கனடாவின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் டிரம்ப் பேசியிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் மன்னர் சார்லஸ் III எந்த ஒரு கருத்தும் கூறாமல் இருப்பது குறித்து கனடா மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் லண்டன் செல்லும் கனடா பிரதமர் மன்னரை சந்திக்க உள்ளதை அடுத்து இதுகுறித்து அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவிக்க வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், மன்னர் சார்லஸ் III உடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி லண்டனில் நேற்று சந்தித்து பேசினார்.
இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ஸ்காட்லாந்து அழைத்திருக்கும் மன்னர் சார்லஸ் III அவருடன் விரைவில் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.