ஊரடங்கு அமுல்படுத்தும் முன் வரை சென்னை மெரீனா பீச்சில் சிறுவர்களை ஏற்றிக்கொண்டு ஜாய்ரைய்ட் மூலம் தினமும் மகிழ்விப்பவை வெற்றி, அலெக்ஸ் மற்றும் சந்தோஷ் என்னும் மூன்று குதிரைகள். இன்று உண்ண ஒரு வேளை உணவின்றி எலும்பும் தோலுமாக பரிதாபமாக காட்சி தருகின்றன என்பதுதான் பரிதாபம்.
“எந்த வருமானமுமே இல்லாமல், என் குடும்பத்து சாப்பாட்டு செலவையே பாத்துக்க முடியாத இந்த நெலமையில இந்த குதிரைகளுக்கு எங்கிருந்து தீவனம் வாங்கி போடுறதுங்க. இதுவரைக்கும் 35000 ரூபா வரை கடன் வாங்கியிருக்கேன் இதுக தீவனத்துக்கு மட்டும். ஒரு நாளைக்கி ரூ. 3500/- ஆகுது இதுக்கு. அவ்ளோ பணம் என்கிட்ட ஏது?” என்கிறார் 11 வருடங்களாக இந்த தொழிலை செய்து வரும் ராஜ்குமார் நொந்து போய்.
ஒரு மாதம் முன்னால் இந்த குதிரைகளின் நிலையை அறிந்து “People for Animals” அமைப்பைச் சேர்ந்த சிரய்னி பெரைரா வாரம் ஒரு முறை தீவனங்கள் அளித்து உதவியுள்ளார்.
“அதோட மெரீனாவை சேர்ந்த 17 குதிரைகளுக்கு தீவனம் சப்ளை பண்ண ஆரம்பிச்சேன். இதை கேள்விப்பட்டு கோவளம், மகாபலிபுரம்னு மத்த பீச்சை சேர்ந்தவங்களும் உதவி கேட்டு வர, இப்போ மொத்தமா 143 குதிரைகளுக்கு தீவனம் குடுத்திட்டிருக்கோம். ஒரு வாரத்துக்கு ரூ. 1.2 லட்சம் வரை செலவாகுது. ஒரு சில கிளப் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் சிறு சிறு உதவிகள் மூலம் இதை செஞ்சிட்டு வறோம். ஆனா இது பத்தல.
இத்தனை குதிரைகளுக்கும் ஒரு வாரத்துக்கு 25 மூட்டை கோதுமை தவிடு, ரெண்டு டன் புல் தேவைப்படுது. இதை ரெட் ஹில்ஸ்ல இருக்கிற எங்களோட பண்ணையிலருந்து தான் சப்ளை பண்றோம். இந்த குதிரைகள் பாலத்துக்கு கீழே, குப்பைத்தொட்டினு பார்க்கவே பாவமான நிலமைல நின்னுட்டு இருந்துச்சுக. இதில அலெக்ஸ், வெற்றி மற்றும் சந்தோஷ்னு மூனு குதிரைகள் நிலையும் ரொம்ப மோசமா இருந்ததால எங்க ஷெட்க்கு கூட்டிட்டு வந்துட்டேன்” என்று விவரிக்கிறார் பெரைரா.
இதில் இன்னும் சோகமான விசயம், “இன்னும் ஒரு வாரத்துக்கான தீவனம் தான் கையிருப்புல இருக்கு. அதுக்கப்புறம் எங்க போய் நிக்கிறதுன்னு தெர்ல” என்று பெரைரா வருத்தத்துடன் கூறுவது தான்.
அரசாங்கம் ஏதாவது உதவிக்கரம் நீட்டினால் இந்த வாயில்லா ஜீவன்கள் பிழைக்க வழி கிடைக்கும்.
– லெட்சுமி பிரியா