டில்லி:

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவினருக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும்  இடையே ஏற்பட்டு வரும் தொடர் மோதல் காரணமாக பதற்றமான சூழல் ஏற்பட்டு வருவதால், அங்கு நாளை இரவுடன் பிரசாரத்தை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு வரும் 19ந்தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் மேற்கு வங்க மாநிலத்திலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அங்கு தேர்தல் பிரசாரம் செய்ய 17ந்தேதி கடைசி நாள்.

ஆனால், அங்கு பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.  நேற்று நடைபெற்ற வன்முறை பெரும் கலவரமாக மாறியது. இதுபோல  ஒவ்வொரு கட்ட வாக்குப் பதிவின்போது மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை பரவி வருகிறது.

இந்த நிலையில், பதற்றம் காரணமாக பிரசாரத்தை ஒரு நாள் முன்னதாகவே முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாளை இரவு 10 மணியுடன் பிரசாரத்தை முடித்துக்கொள்ள அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.