நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
தமிழக காவல்துறை..
இதே ‘அருமையான ‘ நிலை தொடரட்டும் .
சேலம் ஆத்தூர் அருகே வாகன சோதனையின் போது போலீசார் தாக்கியதில் வியாபாரி பலி.. உதவி ஆய்வாளர் கைது.
ரேஷன் அரிசி வாங்கி வந்த வரை காவல் நிலையத்தில் கொண்டுபோய் அடித்து உதைத்த தென்காசி புளியரை காவல் நிலையம் சப்-இன்ஸ்பெக்டர் தலைமை காவலர் மீது வழக்கு பதிவு.
தொழிலாளியை காலால் உதைத்த ராஜபாளையம் போலீசார் 2 பேர் பணியிடை நீக்கம்.
காலையில் நாளிதழ்களை படித்த போது தொடர்ச்சியாக அணிவகுத்து வந்த செய்திகள்தான் இவை.
மற்ற இரு சம்பவங்களைத்தாண்டி முதலில் சேலம் ஆத்தூர் பக்கம் நடந்த சம்பவத்தை பார்ப்போம்.
அண்டை மாவட்டத்திற்கு சென்று மது அருந்தி விட்டு இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் வருகின்றனர் வாகன சோதனை சாவடியில் அவர்களை வழி மறித்து போலீசார்
விசாரிக்கின்றனர் வாக்குவாதம் ஏற்பட்டு முருகேசன் என்ற வியாபாரியை நடுரோட்டில் வைத்து போலீசார் சரமாரியாக தாக்குதல் நடத்துகின்றனர்.
இதில் முருகேசன் மூச்சாகி நடு ரோட்டிலேயே மயங்கி விழுகிறார்.
முருகேசன் தாக்கப்படும் காட்சிகள் செல்போன் வீடியோவில் பதிவாகி இணையதளத்தில் வைரலாகி விடுகிறது
பின்னர் முருகேசன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழக்கிறார்.
போலீசாரால் ஒரு வியாபாரி நடுரோட்டில் அடித்துக் கொல்லப்பட்டார் என்ற தகவல் வேகமாக பரவ பரவ மாநிலம் முழுவதும் பேரதிர்ச்சி.. மாநில அரசு பதறிப்போய் முருகேசன் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிக்கிறது.
இன்னொருபுறம், தாக்குதல் தொடர்பாக காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி உடனே கைது செய்யப்படுகிறார்
இந்த கொடுமையான சம்பவம் எந்த தேதியில் நடக்கிறது என்று பார்த்தால் சாத்தான்குளம் செல்போன் கடை உரிமையாளர்களான ஒரு அப்பாவும் மகனும் காவல் நிலையத்திற்கு இழுத்துச்செல்லப்பட்டு கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஓராண்டு நினைவு தினத்தன்று.
போலீசாரின் அத்து மீறல் சம்பவங்கள் இதே போல் தொடருவதும் நிவாரணம் அறிவிப்பதும், போலீசார் மீது நடவடிக்கை என கண்துடைப்பு நாடகங்கள் அரங்கேறுவதும் வழக்கமாக போய்விட்டது.
மொத்தமாக சீர்திருத்தம் செய்யவேண்டிய கட்டாயத்தில் தமிழக காவல்துறை இருக்கிறது என்பதை எல்லோரும், ஆட்சியாளர்களும் அவ்வளவு ஏன் நீதிமன்றங்கள்கூட மறந்துவிடுகின்றன.
முதலில் செய்யவேண்டியது காவல்துறையினருக்கு மற்றவர்களை மரியாதையோடு மதிக்க கற்றுக்கொடுக்கவேண்டும்.
வாயை திறந்தாலே, டேய், யோவ், ஏய் போன்ற வார்த்தைகள்தான்.
சாலையில் பாருங்கள், சாமன்ய மக்கள் என்றால் மரியாதையே இருக்கிறாது. விலையுயர்ந்த காரில் வந்தால், நிறுத்தி சார் என்றுதான் ஆரம்பிப்பார்கள். காரணம், காரில் வருபவன் கண்டிப்பாக செல்வாக்கோடுதான் இருப்பான். அவனிடம் வாலாட்டினால் டவுசரை கழட்டிவிடுவான் என்ற பயம்தான்.
அதே நேரத்தில் ஆட்டோ, லாரி டிரைவர்கள் என்றால், எடுத்த எடுப்பிலேயே டேய், யோவ்..தான்.
சமீபத்தில் இணையத்தில் வைரலாம சென்னை சம்பவம் ஒன்று, பெண் வழக்கறிஞர் ஒருவர் நடு வீதியில் ஆவேசமாக போலீசாரை பார்த்து தடித்த சொற்களை பயன்படுத்துகிறார், அவரிடம் போலீசார் அப்படி பம்முகிறார்கள்’
இதே மாதிரி ஒரு பெண் கூலி தொழிலாளி, போலீசாருக்கு எதிராக தடித்த வார்த்தைகளை பயன்படுத்தினால் என்ன நடக்கும்? பொளேர் என்று அறைவிடுவார்கள், லட்டி பதம் பார்க்கும்..
வெளிநாடுகளில் போலீசார் பொதுமக்களை எப்படி கண்ணியமாக கையாள்கின்றனர் என்பதை இவர்கள் மண்டையில் ஏறுகிறமாதிரி வீடியோ காட்சிகளை போட்டுக்காட்ட வேண்டும்.
உதாரணத்திற்கு ஒருவர் வாகனத்தை ஓட்டிவருகிறார் என்றால், அவரிடம் விசாரணை என்றால் மரியாதையாகத்தான் ஆரம்பிக்கவேண்டும். அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்று தெரியவந்த பிறகுதான் சட்டத்தின்பிடி அவரை இறுக்கவேண்டும்.
ஆனால் தமிழக போலீசாருக்கு, ஆரம்பமே எல்லோரையும்குற்றவாளி என தீர்மானித்துக்கொண்டு அதன்படியே மரியாதையே இல்லாத விசாரணை.. எவ்வளவு கேவலமான மனநிலை..
இதைவிட இன்னொரு முக்கியமான விஷயம், குறுநில மன்னர்கள் என்ற கர்வ மனப்பான்மை..
காவலர், தலைமைக்காவலர், உதவி ஆய்வாளர் ஆய்வாளர் போன்றோரில் பலருக்கும் அவர்கள் காவல் எல்லை என்பது அவர்களுக்கு அடிமைப்பட்ட பூமி என்றே நினைக்கிறார்கள். நாம் நினைத்தால் யாரை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எவன் நம்மை என்ன செய்துவிடமுடியும் என்று மமதை மனதளவில் ஊறிப்போயுள்ளது.
அரசாங்கத்தின் மற்ற துறைகளின் பெரிய பெரிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள்கூட பொதுவெளியில் அதிகார மமதையை காட்டுவதில்லை. ஆனால் ஒரு காவல் ஆய்வாளர் பொதுவெளியில் வந்தால் கிட்டத்தட்ட மகாராஜா கணக்கில்தான் வருகிறார். சில இடங்களில் மைக்கிலேயே ஒப்பனாக, டேய் வண்டிய எடுடா, டேய் ஆட்டோ இங்கே வா, என்று ஆய்வாளர்களே திருவாய் மலர்கிறார்கள். இவங்க படிப்பு, பயிற்சியெல்லாம் சொல்லிக்கொடுத்த லட்சணம் இதுதான் போல,
இவர்களுக்கும் மேல உள்ள தலைமைகளோ, வேறு விதமாக தங்கள் பங்குக்கு கைங்கர்யம் ரொம்ப தூரம் போகவேண்டும்
கோவை கிணத்துக்கடவு காவல்நிலைய ஆய்வாளர் சுரேஷ், தலைமைக்காவலர் வெங்கடாசலம் ஆகிய இருவர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர். என்ன காரணம், சாலை விபத்தை ஏற்படுத்திய ஒரு வரை ஜாமீனில் விடுவிக்க 12000 ரூபாயை லஞ்சமாக பெற்றனர் என்ற குற்றச்சாட்டு.. இதை போலீஸ் செய்திக்குறிப்பே தெளிவாக சொல்கிறது.
லஞ்சம் வாங்குவது சட்டப்படி கிரிமினல் குற்றம், அதன்படி மற்ற அரசின் துறைகளில் லஞ்சம் வாங்குபவர்கள் பிடிபட்டால் உடனே கைது. ஆனால் காவல்துறைக்கு மட்டும் இந்த சட்டம் பொருந்தாது. ஆயுத படைக்கு மாற்றம், இடமாற்றம் இதையும் தாண்டி கொஞ்சம் அதிக பட்சமா சஸ்பெண்ட் என்று போவார்களேயொழிய எல்லோருக்குமான கைது என்ற நடவடிக்கைக்கு போக மாட்டார்கள்.
இதுபோன்ற அப்பட்டமான விதிமீறல் விஷயங்களை எந்த நீதிமன்றமாவது தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து தட்டிக்கேட்கிறதா என்று பார்த்தால் அதுவும் கிடையாது. சரி போகட்டும், மீடியாக்களாவது விவாதித்து பேசு பொருளாக ஆக்குகின்றனவா என்று பார்த்தால் அதுவும் கிடையாது.
இதே நிலை தொடர்ந்தால் காவல்துறையினர் மத்தியில் நல்ல அளவிலான மாற்றம் ஏற்பட வாய்ப்பே இல்லை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான திமுக அரசும் வழக்கம்போல் இதையெல்லாம் வேடிக்கை பார்த்தால், நாளுக்கு நாள் போலீசாரின் அத்துமீறல்களுக்கு நிவாரணம் அறிவித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
முதலில் தமிழக காவல் துறையினருக்கு உளவியல் ரீதியாக பயிற்சி கொடுங்கள், கடுமையை மட்டுமே காட்டுவதென்பதல்ல போலீசார் பணி.. எந்த நேரத்தில் கடுமையா காட்ட ஆரம்பிக்க வேண்டும் என்பதில் இருக்கிறது அவர்களுக்கான இலக்கணம்.
லட்டி என்பது எச்சரிக்கையின் அடையாளமே இருக்கவேண்டுமே தவிர, லட்டி வைத்திருப்பதால் யாரையாவது அடித்துக்கொண்டிருக்கவேண்டும் என்ற அர்த்தம் அல்ல.
நாகரீக உலகத்திற்கு போலீசாரை அழைத்து வாருங்கள்.