டெல்லி:
நேரடி வரி விதிப்புக்கான தலைமை கணக்கு மற்றும் தணிக்கை குழு (சிஏஜி) நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் ஒரு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில், ‘‘வருமான வரித்துறையினர் வழக்குகளை பதிவு செய்வதில் பாரபட்சமாக நடக்கின்றனர். ஆட்களை தேர்வு செய்து தான் வழக்குகளை பதிவு செய்கின்றனர்.
மும்பையில் பண மோசடியில் ஈடுபட்டதாக இதர துறை அமலாக்க பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரகணக்கான செயல்படாத போலி நிறுவனங்களை வருமான வரித் துறை கண்டுகொள்ளவில்லை. இது போன்று மகராஷ்டிராவில் 2 ஆயிரம் நிறுவனங்கள் செயல்படுகிறது. இவை அனைத்தும் 2011ம் ஆண்டில் மாநில வணிக வரித்துறையினரால் வெளிப்படுத்தப்பட்ட நிறுவனங்களாகும்.
இந்த நிறுவனங்கள் போலி பில் தயாரித்து கணக்கில் வராத 10 ஆயிரம் கோடி ரூபாயை மாற்ற பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் விபரங்களை வணிக வரித் துறை, அதன் ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. விசாரணைக்கு போதுமான தகவல்கள் ஆன்லைனில் உள்ளது. ஆனால் இவர்களை கண்டுபிடிக்க வருமான வரித் துறை சிறு நடவடிக்கை கூட எடுக்கவில்லை’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த சிஏஜி அறிக்கையில், ‘‘ 2008-09ம் ஆண்டில் ஆயிரத்து 555 ஹவாலா நபர்கள் மூலம் 39 ஆயிரத்து 488 பேர் பயனடைந்துள்ளனர் என்று மகராஷ்டிரா வணிக வரித் துறை பாம்பே ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்திருந்தது. இதற்கு முந்தைய 3 ஆண்டுகளில் ஆயிரத்து 333 கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடந்துள்ளது.
10 ஆயிரத்து 640 கோடி ரூபாய்க்கு வரி ஏயப்பு நடந்திருப்பதாக 2 ஆயிரத்து 59 டீலர்களின் பெயர்கள் வரி ஏய்ப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், இந்த டீலர்களுக்கு எதிராக வருமான வரித்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளை என்ன என்பதை தெரியபடுத்த வேண்டும்‘‘ என சிஏஜி கேட்டுக் கொண்டுள்ளது.
‘‘கடந்த காலங்களில் இந்த டீலர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாமலோ அல்லது பொய்யான தகவல்களுடன் தாக்கல் செய்துள்ளனனர். இல்லை என்றால் வருவாய் இல்லை என்றோ, அல்லது தாக்கல் செய்வதை நிறுத்தியும் உள்ளனர். வருமானத்தை குறிப்பிட்டிருக்கும் விண்ணப்பங்களை மட்டுமே வருமான வரித் துறை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
இதன் மீதான உண்மை தன்மையை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சொந்த புலனாய்வு அமைப்பு மூலம் கூட இதை கண்டறிய வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்கவிலை’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.