2019 – 20 நிதியாண்டில் குஜராத் மாநில நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு 11659 கோடி ரூபாய் நிதி மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.
2015-16 ம் நிதியாண்டில் அம்மாநிலத்திற்கு 2542 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டு 350 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்று மத்திய தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.
2014 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் குஜராத் சொர்க பூமியாக மாறியுள்ளதாக அதன் வளர்ச்சியைக் காட்டி நாட்டின் பிரதமராக தேர்வான மோடி, கடந்த ஏழு ஆண்டுகளில் நாட்டின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் குஜராத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் மற்ற மாநில மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
837 கோடி ரூபாய் தனியார் நிறுவனங்களுக்கும், அறக்கட்டளைகளுக்கு 79 கோடி ரூபாய், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு 17 கோடி ரூபாய், பதிவுசெய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு ரூ. 18.35 கோடி உள்ளிட்ட நிதி ஒதுக்கீடுகள் இந்திய அரசால் நேரடியாக வழங்கப்பட்டிருப்பதாக மத்திய தணிக்கைத் துறை தனது அறிக்கையில் கூறியுள்ளது.
மாநில நிதிநிலை அல்லது மாநில கருவூலம் மூலம் வழங்கப்படாமல் மாநில நிறுவனங்களுக்கு மத்திய அரசு நேரடி நிதி ஒதுக்கீடு செய்வது மாநில வரவு செலவு கணக்கில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று மத்திய தணிக்கைத் துறை கவலை தெரிவித்துள்ளது.
மேலும் 2019 – 20 நிதியாண்டில் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான ஓய்ஊதிய திட்டத்திற்கு 3133 கோடி ரூபாயும், மத்திய மாநில அரசுகள் (50:50) இணைந்து செயல்படுத்தும் காந்திநகர் முதல் அகமதாபாத் வரையிலான மெட்ரோ ரயில் இணைப்புத் திட்டத்திற்கு 1667 கோடி ரூபாயும், 100 நாள் வேலை திட்டத்திற்கு 593 கோடி ரூபாய் என பல்வேறு திட்டங்களின் நிதியை மத்திய அரசு நேரடியாக வழங்கியிருக்கிறது.
மாநில நிறுவனங்களுக்கு மத்திய அரசு நேரடியாக நிதி வழங்க உரிமை உள்ளது என்ற போதும், மெட்ரோ ரயில் போன்ற வர்த்தக ரீதியிலான திட்டங்களுக்கு ஆதரவும் எதிர்ப்பும் உள்ள நிலையில் இது தொடர்பான நிறுவனங்களுக்கு நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்வது பல்வேறு சிக்கலை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.