இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியே தொடர்வார் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் முடிவடைந்ததையொட்டி புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் ரவி சாஸ்திரி, ராபின் சிங், லால் சந்த் ராஜ்பூட் (இந்தியா), டாம் மூடி (ஆஸ்திரேலியா), மைக் ஹெஸ்சன் (நியூசிலாந்து), பில் சிம்மன்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகிய 6 பேர் கொண்ட இறுதி பட்டியலை வெளியிட்டது. இந்த 6 பேரிடம் இன்று மும்பையில் கபில்தேவ் தலைமையிலான குழு நேர்காணல் நடத்தியது. சிலரிடம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நேர்காணல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் மாலையில் செய்தியாளர்களை சந்தித்த கபில் தேவ் தலைமையிலான தேர்வுக் குழுவினர், இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியே தொடர்வார் என்றும், 2வது பயிற்சியாளராக மைக் ஹெஸ்சன், 3வது பயிற்சியாளராக டாம் மூடி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.