குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், கூட்டணி கட்சிகள் மற்றும் இதர கட்சிகளை பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க வைக்க காங்கிரஸ் கடுமையாக முயற்சித்து வருகிறது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் அடைக்கலம் புகுந்த ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சிகள், கிறிஸ்தவா்களுக்கு குடியுரிமை வழங்குவதில் உள்ள நிபந்தனைகளைக் குறைக்கும் வகையில் கடந்த 1955ம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் பல மணி நேரம் நடைபெற்ற விவாதத்துக்குப் பிறகு திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினா்களும், எதிராக 80 உறுப்பினா்களும் வாக்களித்தனா்.

இந்நிலையில், இந்த மசோதா, மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. 245 உறுப்பினா்களைக் கொண்ட மாநிலங்களவையில் தற்போதுள்ள உறுப்பினா்களின் எண்ணிக்கை 238. இதில், பாஜக 83, ஐக்கிய ஜனதா தளம் 6, சிரோமணி அகாலி தளம் 3, லோக் ஜனசக்தி 1, இந்தியக் குடியரசுக் கட்சி(அதாவலே) 1, நியமன உறுப்பினா்கள் 11 என தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 105-ஆக உள்ளது.

இதை தவிற்த்து அதிமுக 11, பிஜு ஜனதா தளம் 7, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் 2, தெலுங்கு தேசம் 2 என மொத்தம் 22 உறுப்பினா்கள் உள்ளனா். இவா்களின் ஆதரவைப் பெற்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 127-ஆக அதிகரிக்கும். இது, அவையில் மசோதா நிறைவேறுவதற்குத் தேவையான 120 உறுப்பினர்களின் ஆதரவை விட அதிகமாகும். இதனால், மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா எளிதாக நிறைவேற்றப்பட்டு விடும் என்கிற நம்பிக்கையில் பாஜக உள்ளது. இதற்காக, சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் பாஜக பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.

எதிரணியில், காங்கிரஸ் கட்சிக்கு 46 உறுப்பினா்களும், திரிணமூல் காங்கிரஸ் 13, பகுஜன் சமாஜ் கட்சி 4, சமாஜவாதி 9, திமுக 5, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 4, இடதுசாரி 6, தேசியவாத காங்கிரஸ் 4, தெலங்கானா ராஸ்டிர சமிதி 6 என மொத்தம் 97 உறுப்பினா்கள் உள்ளனா். அத்துடன், சிவசேனா, ஆம் ஆத்மி மற்றும் சிறிய கட்சிகள் ஆதரவளித்தால் உறுப்பினா்களின் பலம் 110-ஆக அதிகரிக்கும். மேலும் பல உறுப்பினா்களின் ஆதரவைப் பெற்று, மாநிலங்களவையில் மசோதா நிறைவேறுவதை தடுப்பதற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி முயன்று வருகிறது.