மும்பை
குடியுரிமை சட்ட போராட்டம் குறித்துப் பேசியதால் கவிஞர் ஒருவரைக் காவல்நிலையத்தில் பிடித்துக் கொடுத்த உபெர் ஓட்டுனர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கவிஞர் பாபாத்தியா சர்க்கார் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் கடந்த புதன்கிழமை அன்று ர் மும்பை ஜுகு சில்வர் கடற்கரையில் இருந்து குர்லா வரை செல்ல உபெர் டாக்சி ஒன்றைப் பதிவு செய்துள்ளார். காரில் பயணம் செய்யும் போது ஜெய்ப்பூரில் உள்ள மற்றொரு நண்பருடன் தொலைப்பேசியில் உரையாடி உள்ளார்.
சர்க்கார் தனது தொலைப்பேசி உரையாடலில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் குறித்துப் பேசி உள்ளார். அவர்கள் இருவரும் ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் போராட்டங்கள் குறித்துப் பேசி உள்ளனர். ஷகீன்பாக் போராட்டத்தினால் மக்களுக்கு மிகவும் கஷ்டம் உண்டானது குறித்தும் ஜெய்ப்பூரில் நடக்கும் போராட்டத்தைத் திறம்பட நடத்துவது குறித்தும் பேசி உள்ளனர்.
அவர் சென்றுக் கொண்டிருந்த டாக்சியை ஓட்டிய ஓட்டுநர் ரோகித் சிங் திடீரென சாந்தாகுரூஸ் காவல்நிலைய வாயிலில் நிறுத்தி உள்ளார். தமக்கு ஏடிஎம் வரை சென்று பணம் எடுக்க வேண்டும் என சொல்லிவிட்டு இறங்கிச் சென்ற சிங் இரு காவலர்களுடன் வந்துள்ளார். அவர்கள் கவிஞரைக் காவல் நிலையத்துக்குள் அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு ரோகித் சிங் காவல் நிலைய அதிகாரிகளிடம், ”இவர் நமது நாட்டை எரிப்பது குறித்துப் பேசிக்கொண்டு இருந்தார்.இவர் ஒரு கம்யூனிஸ்ட். அவர் நமது நாடு முழுவதையும் மற்றொரு ஷகீன் பாக் ஆக முயர்ஸி செய்கிறார். அவர் பேசுவது அனைத்தையும் நான் பதிவு செய்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கவிஞர் காவல்துறையினரிடம் அந்த பதிவு முழுவதையும் கேட்டு விட்டு தாம் நாட்டை எரிப்பது பற்றிப் பேசி இருந்தாலோ அல்லது தாம் தேச விரோதி என்னும் பொருளில் ஏதாவது பேசி இருந்தாலும் தம்மைக் கைது செயலாம் எனவும் தெரிவித்துள்ளார் அத்துடன் ஓட்டுநரிடம் தன்னை ஏன் காவல் நிலையம் அழைத்து வந்தார் எனக் கேட்டுள்ளார்.
அதற்கு ஓட்டுநர் ”நீங்கள் இந்த நாட்டை பாழாக்குவதை நாங்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா? நான் உங்களைக் காவல் நிலையம் அழைத்து வந்ததற்கு எனக்கு நீங்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். வேறு எங்காவது நான் உங்களை அழைத்துச் சென்றிருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார். அதன் பிறகு காவல்துறையினர் சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.
அந்த விசாரணையில் அவரிடம் சிஏஏ, அதற்கு எதிராக மும்பையிலும் ஷகீன் பாகிலும் நடைபெறும் போராட்டங்கள் உள்ளிட்ட பல கேள்விகள் கேட்டுள்ளனர். அத்துடன் அவர் கையில் அப்போது தம்புராவை வைத்திருந்ததால் அதை ஏன் எடுத்துச் சென்றுள்ளார் எனவும் போராட்டங்களில் கலந்துக் கொள்ள அவருக்கு எப்படிப் பணம் கிடைக்கிறது, அவர் படிக்கும் புத்தகங்கள், அவர் எழுதிய கவிதைகள் குறித்துப் பல கேள்விகள் எழுப்பி உள்ளனர்.
இரண்டரை மணி நேர விசாரணைக்குப் பிறகு வெளி வந்த அவர் தனது டிவிட்டரில் இவற்றைக் குறிப்பிட்டு. “நமது நாடு ஒரு பாசிச நாடு என்பதை இந்நிகழ்வு காட்டுகிறது. காவல்துறையினர் அமைதியாக இருந்தாலும் கடினமாக விசாரணை செய்தனர். அவர்கள் என்னை பெரும் போராளியாகச் சித்தரிக்க முயன்றனர். குடியுரிமை சட்டம் ஏழைகளுக்கு எதிரானது”எனப் பதிந்தார்.
கவிஞர் உபெர் நிறுவனத்துக்கு இது குறித்து புகார் ஒன்றை அளித்துள்ளார். அதை விசாரித்த உபெர் நிறுவனம், “நடந்த விவரம் அறிந்து உபெர் வருந்துகிறது. கவிஞருக்குச் செலவான பணத்தை நிறுவனம் உடனடியாக திருப்பி அளிக்கிறது. பணத்தை விடப் பாதுகாப்பு முக்கியம் என்னும் காரணத்தால் ஓட்டுநர் ரோகித் சுங்குக்குக் கண்டனம் தெரிவித்துப் பணி நீக்கம் செய்கிறோம்” என தகவல் அளித்துள்ளனர்.