சென்னை
குடியுரிமை சட்டம், குடிமக்கள் பட்டியல், மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்டவை இந்துக்களுக்கும் எதிரானது என இயக்குநர் வெற்றிமாறன் கூறி உள்ளார்.
டில்லியில் குடியுரிமை சட்ட போராட்டத்தில் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடும் வன்முறை வெடித்துள்ளது. சுமார் 40க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். பல வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. நகரில் நான்கு மசூதிகள் எரிக்கப்பட்டுள்ளன. நூற்றுக் கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த வன்முறையை எதிர்த்து தமிழக திரைப்பட இயக்குநர்களான வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அப்போது செய்தியாளர்களிடம் வெற்றிமாறன், “கடந்த 16 நாட்களாகக் குடியுரிமை சட்டத்துக்கு எதிராகப் போராடி வரும் இஸ்லாமிய மக்களை நான் வாழ்த்துகிறேன். இஸ்லாமிய மக்களை மட்டும் இந்த குடியுரிமை சட்டம் பாதிக்கவில்லை.
குடியுரிமை சட்டம், குடிமக்கள் பட்டியல் மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்டவை இந்துக்களுக்கும் எதிரானது தான். நான் அனைவரும் இனத்தால் ஒன்று என்பதை வலியுறுத்த இந்த மக்கள் போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்” என தெரிவித்தார்.
இயக்குநர் அமீர், “குடியுரிமை சட்டத்துக்குத் தமிழக முதல்வர் தெரியாமல் ஆதரவு அளித்துள்ளார். குடிமக்கள் பட்டியல் மற்றும் மக்கள் தொகை பதிவேட்டுக்கு அனுமதி கிடையாது என முதல்வர் உறுதி அளித்தால் மக்கள் போராட்டத்தைத் திரும்பப் பெறுவார்கள்.
இடைத் தேர்தல் என்றால் முதல்வர் அமைச்சர் என அனைவரும் செல்லும் போது வண்ணாரப்பேட்டை மக்களைச் சந்தித்து பேச ஏன் மறுக்கின்றனர்? திரைத்துறை தற்போது பலவீனமாக உள்ளதால் பலர் இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளிக்காமல் அரசுக்கு ஆதரவு அளிக்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.