சென்னை:
23ந்தேதி சென்னையில் நடைபெற உள்ள திமுக தலைமையிலான கண்டன பேரணியில் கலந்துகொள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியினருக்கு வேல்முருகன் அழைப்பு விடுத்தள்ளார்.
மத-இன பாகுபாடு பார்க்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“நாட்டில் வேலையிழப்பு, வேலையின்மை, விலையேற்றம், பணவீக்கம் மற்றும் பொருளாதாரமே தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளது. இதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள், காஷ்மீரின் சிறப்பு அங்கீகாரத்திற்கான சட்டப்பிரிவு 370 ரத்து, முத்தலாக் தடை சட்டம், பாபர் மசூதி நிலம் இந்துக்களுக்கே என வரவைத்த தீர்ப்பு, இப்போதைய குடியுரிமை திருத்தச் சட்டம்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்க இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டம் வழிவகை செய்கிறது.
ஒரு குறிப்பிட்ட மதத்தினரை ஒதுக்கும் இச்செயலை இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்கவில்லை. இருந்தும் மற்றவர்களையெல்லாம் காவிக் குடையின் கீழ் கொண்டுவந்துவிடலாம் என்ற குரூர ஆசையாலேயே இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆனால் இதன் விளைவு மகா மோசமானது. நாடே பற்றி எரிகிறது. முதலில் பற்றிக் கொண்டது அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள். அசாமிலோ பாஜக பெரும்புள்ளிகள், தலைவர்கள், அமைச்சர்கள் வீடுகளெல்லாம் தீக்கிரையாயின; 12 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு எதிராக தனித்து நிற்கின்றனர். இன்னும் சில பேர் பாஜகவை எதிர்த்தால் பாஜக அமைச்சரவையே கவிழ்ந்துவிடும்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியே குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணிக்குத் தலைமை தாங்கினார்; என் பிணத்தின் மீதுதான் இச்சட்டம் இங்கு வரமுடியும் என்றார்.
மாணவர்களின் போராட்டம் டெல்லியையே மிரள வைத்தது; அதனால் மாணவர்கள் கொடூர தாக்குதலுக்குள்ளாகினர். இதனை எதிர்த்து மற்ற மாநிலங்களிலெல்லாம் மாணவர் போராட்டம் வெடித்தது.
பாஜக ஆளும் கர்நாடகாவில் நடந்த போராட்டத்தில் இருவர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர்; உத்தரப்பிரதேசத்திலும் சிலர் பலியாகினர்.
இப்படி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடக்கும் தன்னெழுச்சியான போராட்டங்களை ஒடுக்கும் பாஜக அரசுகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை என்று பெரிய நகரங்களிலெல்லம் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
இச்சட்டத்தை 8 மாநிலங்கள் அமல்படுத்தமாட்டோம் என்றன; மேற்கு வங்கம், பஞ்சாப், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, சத்தீஸ்கர், கேரளா, புதுச்சேரி ஆகியவை. இவை பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள்.
தமிழ்நாடும் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலம்தானே, அது எப்படி? குடியுரிமை திருத்தம், சட்ட மாகக் காரணமே தமிழ்நாடு அதிமுக அரசுதான். ஒருவர் பாக்கியில்லாமல் அமைச்சரவையே ஊழல் புகார் மற்றும் வழக்கில் சிக்கியிருப்பதையும் 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு வெளியாகும் மறுநிமிடமே அதிமுக ஆட்சி கவிழக்கூடியதையும் பாஜகதானே பாதுகாத்து வருகிறது. அதனால்தான் தனது 11 மாநிலங்களவை எம்பிக்களையும் ஒரு பாமக எம்பியையும் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து ஓட்டுப்போடச் செய்து சட்டமாக்கியது அதிமுக.
அதிமுகவின் இந்த வரலாற்றுத் துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது என்பதை தமிழக மக்களிடம் எடுத்துச் சொல்லும் வண்ணமே தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை வரும் 23-ம் தேதியன்று நடத்த இருக்கின்றன திமுக தலைமையிலான 12 கட்சிகள்.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளும் என்பதோடு, கடந்த மக்களவைத் தேர்தலில் தனியாகப் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யமும் இதில் இணைகிறது.
திரைப்படத் துறையினர் மற்றும் இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் யாவருக்குமே இந்த 23-ம் தேதி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார் திமுக தலைவர்.
23-ம் தேதி போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்வைக்கப் போகும் முழக்கம் இதுதான்:
“மத்திய பாஜக அரசே, முஸ்லிம்கள் மற்றும் ஈழத் தமிழருக்குக் குடியுரிமை மறுக்கும், அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரான, மத-இன பாகுபாடு பார்க்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெறு!
பாஜகவின் அடிமை அதிமுகவே, இந்த பாசிச குடியுரிமை திருத்த மசோதா சட்டமாக நீ வாக்களித்ததே காரணமாகும்;
இது மன்னிக்கவே முடியாத வரலாற்றுத் துரோகமாகும்; இதிலிருந்து உனக்கு மீட்பே கிடையாது”
இவ்வாறு வேல்முருகன் கூறி உள்ளார்.