டெல்லி
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி ஆட்சி நடைபெற்று வருகின்றது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வராக மனீஷ் சிசோடியா உள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சராக சத்யேந்தர் ஜெயின் உள்ளார்.
மத்திய பா.ஜ .க. அரசு, தொடர்ந்து ஆம் ஆத்மி அரசுக்குப் பல முட்டுக்கட்டைகளை போட்டு வருகின்றது. பஞ்சாபில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், துணை முதல்வர் சிசோடியா மீது சுமத்தப்பட்டுள்ள முறைகேடு புகார் குறித்து மத்திய விசாரணை அமைப்பான சி.பி.ஐ. விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது மத்திய அரசின் பழிவாங்கும் செயல் என ஆம்ஆத்மி கட்சி கண்டித்துள்ளது.
பிரதமரின் “மன் கி பாத் ” நிகழ்ச்சியைப் போன்று கடந்த ஜூலை 2016ல் “அரவிந்த் கேஜ்ரிவாலுடன் பேசுங்கள் ” எனும் சமூகவலைத்தளங்கள் மூலம் முதல்வர் கெஜ்ரிவால் பொதுமக்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி டெல்லி அரசால் நடத்தப் பட்டு வருகின்றது. இந்நிகழ்ச்சி கோவா மற்றும் பஞ்சாபி மாநில சட்டசபை தேர்தல்களுக்கு மக்களின் ஆதரவைப்பெறும் நோக்கில் நடத்தப்படுவதாக விமர்சனம் வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகுறித்து மக்களுக்கு விளம்பரம் செய்வதற்காக ” பெர்பெக்ட் ரிலேசன்ஸ் ” எனும் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப் பட்டதில் முறைகேடுகள் உள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டு சிபிஐ விசாரணையைத் துவங்கியுள்ளது.
இந்த நிறுவனம், டெல்லி அரசிடமிருந்து முன்பணமாக ஒன்றரை கோடியைப் பெற்றுள்ளது. இது பொதுவான நடைமுறைகளுக்கு எதிரானது எனவும், இதுகுறித்து துணைமுதல்வரிடம் விசாரணை நடத்தப்படுமென்றும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுகாதாரத்துறை அமைச்சரான சத்யேந்திர ஜெயினின் மகள் சவுமியாவை டெல்லி மாநில சுகாதாரத்துறைக்கு சிறப்பு ஆலோசகராக நியமித்துக் குறித்தும் விசாரணை நடைபெறவுள்ளது. இந்த நியமனம் பின்னர் திரும்பப் பெறப்பட்டது. எல்.ஜி. ஜங், சிபிஐக்கு எழுதிய கடிதத்தில் ” சவுமியா கட்டிடக்கலை பயின்றவர். சுகாதாரத்துறையில் எந்த முன் அனுபவமும் இல்லாதவர்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த இரண்டு குற்றச்சாட்டுகள்குறித்து விசாரணையை சிபிஐ முடுக்கிவிட்டுள்ளது.