தஞ்சாவூர்: தஞ்சை அருகே புறவழிச்சாலை அமைப்பதற்காக சம்பா பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலத்தில், பயிர்களை அகற்றிவிட்டு, அதன்மீது மண்கொட்டி சாலை அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடிய நிலையில், அவர்களை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி அகற்றிவிட்டு, சாலை அமைக்கும் பணியை தொடர்ந்தனர். இது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சையை அடுத்த திருவையாறில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து திருவையாறை அடுத்த மணக்கரம்பை, அரசூர், காட்டுக்கோட்டை, கண்டியூர், கீழதிருப்பூந்துருத்தி, கல்யாணபுரம், பெரும்புலியூர், திருவையாறு ஆகிய ஊர்கள் வழியாக 6.74 கி.மீ. தூரத்துக்கு ரூ.191 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த புறவழிச்சாலையானது முழுவதும் நெற்பயிர்கள் விளைவிக்கப்படும் விவசாய நிலங்கள் மீது அமைக்கப்பட திட்டமிட்டதால், விவசாயிகளும், அந்த பகுதி மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், முழுவதும் விவசாய நிலங்களில் அமைக்கப்படுவதால் நெல், கரும்பு, வாழை, தென்னை மரங்கள், வெற்றிலைக் கொடிக்கால் அடங்கிய நிலங்களை அழித்து அதில் சாலை அமைக்கப்பட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறி வருகினறனர். ஆனால், அதை மாவட்டம் நிர்வாகம் ஏற்க மறுத்து, விவசாய நிலங்கள் மீது சாலை அமைக்கும் பணியை தொடங்கி உள்ளது.
இதனால், கோபமடைந்த விவசாயிகள், கண்டியூர் பகுதியில் விளைநிலங்களை அழிப்பதை கண்டித்து போராட்டத்தில் குதித்தனர். கடந்த மூன்று நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நடவு செய்யப்பட்ட நெற்பயிரை அழித்து புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, அந்த பகுதியில் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம், மோதல் போக்கு நீடித்து வந்தது.
இந்த நிலையில் இன்று கருப்புக் கொடியுடன் சென்று விளைநிலங்களை விட்டுத்தரமாட்டோம் எனக்கூறி, சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி இரண்டு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களை காவல்துறையினர் உதவியுடன் குண்டுகட்டாக தூக்கி அங்கிருந்து அகற்றிவிட்டு அங்கு நடவிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிரை அழித்து அதன்மீது மண்கொட்டி சாலை அமைக்கும் பணியை தொடர்ந்து வருகிறது.
புறவழிச்சாலையானது 50 அடி அகலத்தில் அமைக்கப்பட உள்ளதால், விவசாய நிலத்தில் 100 அடி அளவுக்கு தற்போது செம்மண் நிரப்பப்பட்டு வருகிறது. அரசூர், காட்டுக்கோட்டை, கண்டியூர் பகுதியில் பல நூறு ஏக்கரில் சம்பா நெற்பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிர்களை அழித்து அதன் மீது பொக்லின் எந்திரங்களை கொண்டு செம்மண், கிராவல்கள் பரப்பப்படுகிறது. கடந்த சில நாட்களாக இந்த பணிகள் நடந்து வந்தது.
சம்பா நெற்பயிர் மீது செம்மண் கிராவல் கொண்டு நெற்பயிரை அழிப்பதை பார்த்த விவசாயிகள் திரண்டு வந்து பொக்லின் எந்திரங்களை மறித்தனர். மேலும் விவசாயிகள் கருப்பு கொடியை வயல்களில் கட்டி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்த நடத்தினார். இழப்பீட்டு தொகை தரவில்லை அப்போது விவசாயிகள், தங்களது நிலத்தை கையகப்படுத்த எந்தவித அறிவிப்பும், நோட்டீசும் வழங்கவில்லை. அதற்கான இழப்பீடு தொகையையும் கொடுக்கவில்லை. தற்போது சம்பா சாகுபடியாக நடவு செய்துள்ளோம். நெற்கதிர் வரும் தருவாயில் உள்ளது. எங்களது கண்முன்னே நெற்பயிரை அழிப்பதை எங்களால் பார்க்க முடியவில்லை. எனவே அறுவடை முடிந்ததும் சாலையை அமையுங்கள். எங்களுக்கு உரிய இழப்பீட்டை அதிகப்படுத்தி தாருங்கள். விவசாய நிலத்தை அழித்துத்தான் சாலை அமைக்க வேண்டும் என்றால் அப்படி ஒரு சாலையே எங்களுக்கு வேண்டாம் என கூறி பணிகளை தடுத்தனர்.
அப்போது போலீசார் அவர்களை தடுத்ததால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகளை குண்டுகட்டாக தூக்கி அகற்றிவிட்டு, மீண்டும் இரண்டு பொக்லின் எந்திரங்களை கொண்டு நெற்பயிர்களை அழித்து சாலை அமைக்கும் பணி தொடர்ந்தது.
“விவசாயிகளை கண் போல காப்போம்…” என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில்தான் சம்பா பயிர்கள் விளையும் நிலங்களில் மண் அள்ளிப்போட்டு விவசாயிகளின் வாழ்வை பாழாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என விவசாயிகள் குமுறுகின்றனர்.