டெல்லி: மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்துக்கும் சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் உடன் மேலும் காலியாக உள்ள 47 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில தேர்தல் தேதிகளையும், வயநாடு மற்றும் நாடு முழுவதும் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகளையும் வெளியிட்டார்.
அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்துக்கு நவம்பர் 20ஆம் தேதி ஒரு கட்டமாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் 20ஆம் தேதி என இரண்டு கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்துள்ளார். இரண்டு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் நவம்பர் 23ஆம் தேதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்து காலியபாக உள்ள வயநாடு மக்களவை தொகுதி மற்றும் 47 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நவம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்டத் தேர்தலுடன், 47 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், ஒரு மக்களவைத் தொகுதியான கேரளா மாநிலம் வயநாடுக்கும் நவம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்குகள் எண்ணிக்கை நவம்பர் 23ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்களவை தேர்தலில் ராகுல்காந்தி 2 தொகுதிகளில் போட்டியிட்டார். அதன்படி, கேரள மாநிலம் வயநாடு, உ.பி. மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், வயநாடு தொகுதியின் வெற்றியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இதனிடையே வயநாடு மக்களவை தொகுதியில் வரலாறு காணாத நிலச்சரிவால் பெருந்துயரம் நிகழ்ந்தது. இதனால் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது வயநாடு மக்களவை தொகுதியில் இயல்பு நிலைமை திரும்பியுள்ளது. இதனையடுத்து வயநாடு மக்களவை தொகுதியில் நவம்பர் 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.
மேலும், மகாராஷ்டிரா தேர்தலுடன் மீதமுள்ள 1 சட்டமன்ற தொகுதிக்கும், உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் மற்றும் மகாராஷ்டிராவின் நாந்தேட் மக்களவைத் தொகுதிக்கும் நவம்பர் 20 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வயநாடு மக்களவை தொகுதியில் வரும் 18-ந் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. அக்டோபர் 25-ந் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசிநாள். வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் அக்டோபர் 30-ந் தேதி. வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ந் தேதி நடைபெறும்.
கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார். வயநாடு மக்களவை தொகுதியில் இந்த முறை 6,47,445 வாக்குகளை ராகுல் காந்தி பெற்றார். இத்தொகுதியில் பதிவான வாக்குகளில் 59.69% வாக்குகளை ராகுல் காந்தி பெற்றிருந்தார். அவரை எதிர்த்து மூத்த இடதுசாரித் தலைவரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா போட்டியிட்டார்.
ஆனி ராஜாவை 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி தோற்கடித்தார். மக்களவை தேர்தலில் 2 தொகுதிகளில் வென்ற ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதி எம்பி பதவியை தக்க வைத்துக் கொண்டு வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் அதே நாளில் வயநாடு மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தமது தங்கை பிரியங்கா காந்தி போட்டியிடுவார் எனவும் ராகுல் காந்தி அறிவித்தார். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தல் களத்தை சந்திக்க இருக்கிறார்.