மரணத்தை உணர்ந்த யானை ’ஜலசமாதி’’ ஆனதாக அதிர வைக்கும் தகவல்..

’பழக்குண்டு’ வைத்துக் கொல்லப்பட்ட யானையின் கடைசி நிமிடங்கள் குறித்து நெஞ்சை உருக்கும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.
கேரள மாநிலம் அட்டப்பாடி வனப்பகுதியில் அன்னாசிப் பழத்தில் வெடிபொருட்களை நிரப்பிக் கருத்தரித்து இருந்த யானைக்கு, சில குரூரர்கள், உணவாகக் கொடுத்துள்ளனர்.
பழத்தில் வெடி இருப்பது அறியாமல் அதனை யானை தின்றபோது, பழம் வெடித்துள்ளது.
இதில் யானையின், தாடை, நாக்கு, வாய் போன்ற உடல் உறுப்புகள் சிதறியுள்ளன.
படுகாயம் அடைந்த அந்த யானை ஒரு வாரம் உயிருக்குப் போராடியுள்ளது.
தாகம் எடுத்ததால் தண்ணீர் குடிக்க வெள்ளியார் ஆற்றுக்கு வந்தபோது ,யானையின் உயிர் பிரிந்துள்ளது.
கொடூரமான முறையில் கொல்லப்பட்ட யானையின் கடைசி நிமிடங்களை, அதனை மீட்கச் சென்ற வன அலுவலர் மோகன் கிருஷ்ணன் என்பவர், தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
‘’ காயம் அடைந்து ஒரு யானை உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகத் தகவல் வந்ததும் அங்கு விரைந்தோம். நாங்கள் பார்த்தபோது அந்த யானை ஆற்றின் நடுப்பகுதியில் நின்று கொண்டிருந்தது.
அதன் தலை தண்ணீரில் மெல்ல மெல்ல மூழ்கிக் கொண்டிருந்தது. தான் சாகப்போகிறோம் என்பதை உணர்ந்த அந்த யானை, ஆறறிவு கொண்டதாக இருந்திருக்க வேண்டும்,. அதனால் தான் தண்ணீரில் நின்ற நிலையில் அந்த யானை , தன்னைத்தானே ‘ஜலசமாதி’ ஆக்கிக்கொண்டது’’ என்று உணர்ச்சி கரமாக யானையின் மரணம் குறித்து வன அலுவலர் முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel