ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், அந்த பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில், பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்ததும்,  பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

 தமிழக அரசு பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் ரேசன் அட்டைதாரர்களக்கு  ஒரு முழுக்க ரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் இலவச வேட்டி, சேலை ஆகியவை  இன்று முதல் வழங்கி வருகிறது. ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்ட நிலையில், இன்று பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, பவானிசாகர், அந்தியூர், பவானி, பெருந்துறை, கொடுமுடி என மாவட்ட முழுவதும் உள்ள   1,233 ரேசன் கடைகளில் 7 லட்சத்து 44 ஆயிரத்து 463 அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் முகாமில் உள்ள 1,379 குடும்பத்தினருக்கும் என மொத்தம் மாவட்ட முழுவதும் 7 லட்சத்து 45 ஆயிரத்து 842 அட்டை தாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு டோக்கன் வழங்கப்பட்டு உள்ளது.

ஆனால், அவர்களுக்கு இன்றுமுதல் பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்க ப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ரேசன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் மொத்தம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில், அவர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படாதது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் தொகுப்பு தொடர்பாக அறிவிப்பு ஒட்டப்பட்டு உள்ளது. அதில்,   தேர்தல் நடைமுறை அமலில் உள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்க அனுமதி கோரி உள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று காலை பொங்கல் தொகுப்பு வாங்க வந்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.