சென்னை: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்-நிர்வாகிகள் 20-ந்தேதி முதல் பிரசாரம் மேற்கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காலமானார். இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, பிப்ரவரி 5-ந்தேதி வாக்குப்பதிவும், பிப்ரவரி 8ந்தேதியும் வாக்கு எண்ணிகையும் நடைபெற உள்ளது.
இந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என தகவல்கள் வெளியாக உள்ளது. இதை எதிர்த்து அதிமு, பாஜக, நாம் தமிழர் கட்சிகளும் களமிறங்க உள்ளன. இதனால், அங்கு 4 முனை போட்டி ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்பு மனுக்கள் நாளை (10-ந் தேதி) முதல் 17-ந் தேதி வரை பெறப்பட உள்ளது. இடையில் சில நாட்கள் விடுமுறை வருவதால், வேட்புமனு பெற 3 நாட்கள் மட்டுமே வேலை நாளாக உள்ளது.அந்த நாட்டிகளில் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய உலை உருவாகி உள்ளது. இதையடுத்து வரும் 18-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெற 20-ந் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை 3 மணிக்கு பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
அதன் பிறகு தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதே அங்கு களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில், திமுக தலைமையும் வரும் 20ந்தேதி முதல் திமுகவினர் தீவிர பிரசாரத்தில் இறங்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
. தி.மு.க. அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி முன்னணி நிர்வாகிகள் அனைவரும் ஈரோட்டுக்கு 19-ந்தேதி சென்றுவிட வேண்டும் என்று கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. தி.மு.க.வினர் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
இதைத் தொடர்ந்து தி.மு.க.வினர் ஒவ்வொரு வரும் ஈரோட்டில் ஏற்கனவே தங்கிய ஓட்டல்களில் இப்போதே முன்பதிவு செய்ய தொடங்கிவிட்டனர். அமைச்சர்கள் பலர் கடந்த முறை அங்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். இப்போது அதே வீடுகளை மீண்டும் வாடகைக்கு கேட்டுள்ளனர். பொங்கல் பண்டிகையையொட்டி தற்போது கட்சி தலைவர்கள் தீவிரமாக மக்கள் பணியாற்றி வருவதால், அது முடிந்ததும் ஈரோடு பயணமாவார்கள் என்று தெரிகிறது.