டில்லி

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ள நிலையில் இதற்கான அவசர ஒப்புதல் டிசம்பர் இறுதிக்குள் கிடைக்கும் என எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளதால் தடுப்பூசியின் தேவை மிகவும் அவசியமாகி உள்ளது.   தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசிகள் சோதனை இறுதிக்கட்டத்தில் உள்ளன.   சீரம் இன்ஸ்டிடியூட் நடத்தி வரும் கோவிஷீல்ட் என்னும் தடுப்பூசி சோதனையில் பங்கு பெற்ற சென்னை வாசி ஒருவர் தமக்குத் தீவிர பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.

இது நாடெங்கும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.  கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி அவருக்குச் சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் தடுப்பூசி அளிக்கப்பட்டு 11 நாட்கள் கழித்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு இந்த பக்கவிளைவுகள் அவருக்கு கொரோனா தடுப்பூசியால் ஏற்படவில்லை என அறிவித்த சீரம் இன்ஸ்டிடியூட் இது போல் தவறாக இழப்பீடு கோரினால் அவரிடம் இருந்து ரூ.100 கோடி இழப்பீட்டை நிறுவனம் வசூலிக்கும் என எச்சரித்தது.

இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா, “இதுவரை நடந்த கொரோனா தடுப்பூசி சோதனைகளில் எந்த மருந்தும் பக்கவிளைவுகள் அற்றவையாகவே உள்ளன.   சென்னையைச் சேர்ந்தவர் அளித்த புகாரின் படி அவருக்கு ஏற்பட்டுள்ள விளைவுகள் ஏற்கனவே அவருக்கு இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.  எனவே தற்போது இறுதிக் கட்ட சோதனை முடிவுகளை ஆய்வு செய்து அரசு ஒப்புதல் வழங்க உள்ளது.

இதுவரை 70000 முதல்  80000 ஆர்வலர்களுக்குச் சோதனைகள் நடந்துள்ளன.  இதில் யாருக்கும் எவ்வித துயரமும் ஏற்படவில்லை.  தற்போது இந்த சோதனைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளதால் இந்த மாதம் இறுதிக்குள்ளாக அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் பொதுமக்களுக்கு வழங்க அவசர அனுமதி அளிக்கப்படும் என நான் நம்புகிறேன்.

தற்போதைய கொரோனா அலையில் ஓரளவு நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.  இது மேலும் குறையும் என நம்புகிறேன்.  இதே நிலை தொடர்ந்து நமக்குத் தடுப்பூசியும் கிடைத்து விட்டால் இன்னும் மூன்று மாதங்களில் நாம் இந்த தொற்று பரவுதலில் ஒரு பெரிய மாறுதலை காண முடியும். ” எனத் தெரிவித்துள்ளார்.