டிசம்பருக்குள் அனைத்து வயது வந்தோருக்கும் கொரோனா தடுப்பூசி : அரசு உறுதி

Must read

டில்லி

ரும் டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து வயது வந்தோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாட்டில் பாதிப்பு அதிகமாகி உள்ளது.  எனவே கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன.  முதல் கட்டமாக ஜனவரி 16 முதல் அனைத்து கொரோனா முன் களப் பணியாளர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதார தொழிலாளர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன.

ஏப்ரல் 1 முதல் 2 ஆம் கட்டமாக 60 வயதைக் கடந்தவர்களுக்கும் 45 வயதைத் தாண்டி இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.   அதன் பிறகு ஏப்ரல் 1 முதல் 45 வயதைத் தாண்டிய அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின.  மே மாதம் 1 முதல் மூன்றாம் கட்டமாக 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக அரசு அறிவித்தது.

ஆனால் தற்போது கொரோனா தடுப்பூசி மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.  இரண்டாம் கட்ட தடுப்பூசி திட்டத்தின் கீழ் இரண்டாம் டோஸ் போடவும் மருந்து இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.   எனவே  தற்போது பல இடங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படவில்லை.   மத்திய அரசு உத்தரவுப்படி மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசி கொள்முதலுக்காகச் சர்வதேச அளவில் ஒப்பந்தப்புள்ளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இந்நிலையில் மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர், “தற்போது உற்பத்தியாகும் கொரோனா தடுப்பூசி மருந்துகள் முதலில் 18-44 வயதானோருக்கு இரண்டாம் டோஸ் போட அளிக்கப்படும்.  வரும் ஜூலை மாதத்துக்குள் தடுப்பூசி இருப்பு சீரடையும்.  அதான் இறகு இந்தியாவில் உள்ள 95 கோடி வயது வந்தோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுவிடும்” என உறுதி அளித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசியின் தற்போதைய உற்பத்தி அடிப்படையில் மே மாதம் 8.5 கோடி டோஸ்கள், ஜூன் மாதம் 15 கோடி டோஸ்கள், ஜூலை மாதம் 15 கோடி டோஸ்கள், ஆகஸ்ட் மாதம் 36 கோடி டோஸ்கள், செப்டம்பர் மாதம் 50 கோடி டோஸ்கள் அக்டோபர் மாதம் 56 கோடி டோஸ்கள், நவம்பர் மாதம் 59 கோடி டோஸ்கள் மற்றும் டிசம்பர் மாதம் 65 கோடி டோஸ்கள் உற்பத்தி ஆகலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

More articles

Latest article