உத்திரபிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக சலுகை விலையில் மதுவகைகள் விற்பனை செய்யப்படுகிறது.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அரசின் கலால் துறையின் நிதியாண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இதன்படி, ஒப்பந்ததாரர்கள் மார்ச் 31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் தங்கள் வசம் உள்ள முழு சரக்கையும் விற்க வேண்டும், இல்லையெனில் மீதமுள்ள அனைத்து பொருட்களும் அரசாங்கக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.

இதனால், கையிருப்பு அதிகமுள்ள மதுக்கடைகள் தங்கள் வசம் உள்ள சரக்குகளை காலி செய்ய சலுகைகளை வாரி வழங்குகிறது.

“ஒரு பாட்டில் பிராந்தி வாங்கினால் ஒரு பீர் இலவசம்! ஒரு பாட்டில் விஸ்கி வாங்கினால் 2 பீர் இலவசம்!” போன்ற சலுகைகளால் மதுக்கடைகளை நோக்கி மதுபிரியர்கள் படையெடுத்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் நொய்டா, முசாஃபர் நகர், ஆப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மதுக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தவிர, ஒரு சில வாடிக்கையாளர்கள் பெட்டி பெட்டியாக மதுவகைகளை வாங்கிச் செல்வதில் ஆர்வம் காட்டினர்.