சென்னை: கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தி, மக்களை பாதுகாக்க அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கிற்கு தொழில் & வணிக சங்கத்தினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா 2வது உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் இன்று முதல் வரும் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இன்று அதிகாலை நான்கு மணிக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. முழு ஊரடங்கு (Lockdown) வணிக வளாகங்களில் இயங்கும் மளிகை மற்றும் காய்கறி கடைகள் இயங்காது. தனியாகச் செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை இயங்கும்.
இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை அமலுக்கு வந்தது. இதையடுத்து, தொழில் & வணிக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, தொழில் & வணிக அமைப்புகளின் கோரிக்கைகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று உறுதி அளித்தவர், கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தி, மக்களை பாதுகாக்க அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கிற்கு தொழில் & வணிக சங்கத்தினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.