சென்னை: ரூ.3500 கோடி திட்ட மதிப்பீட்டில் உயர்மட்ட சாலை பணிகள் நடைபெறும் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார். விமான நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். அதுபோல அமைச்சர் நேரு, 11 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும் கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட்மீதான விவாதம் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இன்றைய அமர்வில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
அப்போது, திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏவான கொங்கு ஈஸ்வரன்,. மதுரவாயல் – துறைமுகம் உயர்மட்ட சாலைக்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும் என சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார்.
இதற்கு பதில் கூறிய அமைச்சர் எ.வ.வேலு, உயர்மட்ட சாலையை விரைந்து கட்ட வேண்டும் என்று டெல்லி செல்லும் போது முதல்வர் கோரிக்கை வைத்தார். ரூ.3,570 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட சாலை பணிகள் நடைபெறும். 21 கிலோ மீட்டர் 2 பகுதியாக பாலம் அமைய உள்ளது. சாலை பணிகள் தொடர்பாக ஒன்றிய அரசு, மாநில அரசு இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. உயர்மட்ட சாலை பணிகள் தொடர்பாக மாதம் ஒரு முறை ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.
கூவம் ஆற்றில் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாலம் செல்கிறது. கூவம் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை வேறு இடத்தில் தங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஒப்பந்த காலம் 2026ம் ஆண்டு வரை உள்ளது. உயர்மட்ட சாலை பாலத்தை விரைவாக கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், இந்த ஆண்டு 11 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கான நிதியை வழங்க நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் மத்திய அரசும் ‘ஜல் ஜீவன் திட்டம்’ மூலம் கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கான நிதியை வழங்குகிறது என்றார். ரூ.896 கோடியில் தாமிரபரணி புதிய கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார்.
புதுப்பட்டினம் கடற்கரைக்கு நாள்தோறும் 2,000 பேர் வருகை தருகின்றனர். அதனால் அதனை சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திரன், சுற்றுலாத்துறை மூலம் ஆய்வு மேற்கொண்டு நிதி நிலைக்கு ஏற்ப கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார்.
இதனிடையே, பயணிகள் வசதிக்காக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுமா என உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, மழைக்காலங்களில் ஏர்போர்ட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், இனிமேல் அனைத்து நாட்களிலும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.