சென்னை:
போக்குவரத்து தொழிலாளர்கள் தவறாக வழி நடத்தப்படுகின்றனர் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடனான ஆலோசனை மேற்கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் மொத்தம் 23 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். போராட்டத்தினை தொழிற்சங்கங்கள் திணித்து கொண்டிருக்கின்றன.
தமிழகம் முழுவதும் இன்று 80 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டன. வழங்கப்பட்டு உள்ள ஊதிய உயர்வு பற்றி விவரம் தெரிந்தால் அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு வருவார்கள். உயர் நீதிமன்றம் போராட்டத்தினை கைவிட்டு பணிக்கு திரும்ப உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை ஏற்று தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்’’ என்றார்.
மேலும், அவர் கூறுகையில், ‘‘ 8 மாதத்தில் ரூ.2 ஆயிரத்து 175 கோடி வழங்கப்பட்டுள்ளது. நிலுவையிலுள்ள 3வது தவணை தொகை வழங்கப்படும். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.350 கோடி வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய ஊதிய ஒப்பந்தப்படி 2.44 மடங்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. தொழிற்சங்கங்கள் கோரும் 2.57 மடங்கு ஊதியத்திற்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.