சென்னை,
தமிழகத்தில் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் நேற்று மாலை முடிவுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து இன்றுமுதல் போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தற்போது பொங்கல் நெருங்கிவிட்டதால்,நேற்றுவரை பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், பெரும்பாலான பயணிகள் விமான சேவையையே நாடினர். மேலும் அடுத்த 2 நாட்களுக்கு விமான பயண டிக்கெட்டுகள் அனைத்தும் புக்காகி விட்டன.
சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து விமானங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.
சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோவை போன்ற இடங்களுக்கு செல்லும் பெரும்பாலோர் விமானத்தை நாடியதால், இந்த பகுதிகளுக்கு செல்லும் 34 விமானங்களின் இருக்கைகளும் நிரம்பி உள்ளன. இருந்தாலும் டிக்கெட் கிடைக்குமா என்று விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் குறிப்பாக இளைஞர்கள், இளைஞிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இன்றும், நாளையும் அனைத்து விமானங்களிலும் இருக்கைகள் நிறைந்துவிட்டது. இதன் காரணமாக அவசர தேவைக்காக விமான பயணத்தை நாடும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இதற்கிடையில், போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று முதல் பணிக்கு திரும்பியுள்ளதால், சிறப்பு பேருந்து களுக்கு முன்பதிவு செய்யப்படாத நிலையில், சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு இன்றி நேரடியாக பயணிகள் செல்லலாம் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
பொங்கல் சிறப்பு பேருந்துகள் சென்னையில், அண்ணாநகர், சைதாப்பேட்டை, பூந்தமல்லி, தாம்பரம் சானிடோரியம், வண்டலூர் ஆகிய இடங்களிலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.