சென்னை: தமிழக தலைநகர் சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக, பாதிக்கப்படும் நோயாளிகளின் வசதிக்காக ஆக்சிஜன் வசதியுடன் பிரத்யேக பஸ் ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. தனியார் அமைப்பு உதவியுடன் இணைந்து சென்னை மாநகராட்சி இந்த சேவையை தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் தீவிரமாக உள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், நோயாளகள் சிகிச்சை பெற வசதி இல்லாத நிலை உள்ளது. மேலும் சில மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், ஜெயின் சங்கம் என்ற தனியார் அமைப்பு சென்னை மாநகராட்சியுடன் இணைந்து அரசு மருத்துவமனையில் பிரத்யேகமாக ஆக்சிஜன் வசதியை ஏற்பாடு செய்துள்ளது. மேலும், தனியார் பள்ளி வாகனங்கரைள ஆக்சிஜன் வசதியுடன் தற்காலிக ஆம்புலன்ஸ் வாகனங்களாக மாற்றி உள்ளது. இந்த ஆம்புலன்சில் ஒரே நேரத்தில் 6 பேர் ஆக்சிஜன் உடன் மருத்துவமனைகளுக்கு பயணிக்க வசதி செய்யப்பட்டு உள்ளது.
மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி இருந்தால், அவர்களுக்கு முதலுதவி அளிக்கும் வகையில் இந்த வாகனத்தில் வைத்து ஆக்சிஜன் கொடுக்கப்படும். பின்பு மருத்துவமனையில் உள்ள படுக்கைகளுக்கு நோயாளிகள் மாற்றப்படுவார்கள். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட நான்கு மருத்துவமனைகளில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் சென்னையில் 20 முதல் 25 ஆக்சிஜன் பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.