bus missing madurai
மதுரை:
வாகனங்கள் காணாமல் போவது உண்டு. பெரிய சைஸ் பேருந்து.. அதுவும் பரபரப்பான பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிக்கும் பஸ் காணாமல் போகுமா?
போயிருக்கிறது.
இன்று காலை, மதுர மாட்டுத்தாவணி மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு பேருந்து காணாமல் போய்விட்டது!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பணிமனைக்குரிய (TN67 N0680) அரசு பேருந்து, செங்கோட்டையில் இருந்து நள்ளிரவு ஒரு மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வந்தது. பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் தங்கமணியும், நடத்துனர் பாண்டிதுரையும் ஓய்வு அறைக்கு சென்றனர்.
விடிற்காலை 5.30 மணிக்கு மீண்டும் செங்கோட்டை செல்லவதற்காக ஓட்டுநரும், நடத்துனரும் வந்திருக்கிறார்கள்.
நிறுத்திய இடத்தில் பேருந்தை காணோம்!
“தானாக நகர வாய்ப்பில்லை.. ஆனாலும் தேடிப்பார்ப்போம்” என்று பதட்டத்துடன் பேருந்து நிலையம் முழுதும் தேடியிருக்கிறார்கள்.
ஊஹூம்.. காணவே இல்லை!
உடனடியாக, மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு ஓடிப்போய், “ஐயோ.. பஸ்ஸை காணோம் ஆபீசர்” என்று அரற்றியபடியே புகார் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளுக்கும் தகவல் தெரிவித்த காவல்துறையினர், மாயமான பேருந்தை வலைவீசி தேடினார்கள்.
இறுதியில் மாயமான அந்த பேருந்து சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே திருமாஞ்சோலை என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
தகவல் அறிந்து பணிமனை மேலாளர், டி.எஸ்.பி. உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
“பேருந்தை கள்ளச்சாவி போட்டு ஓட்டிச்சென்றவனால் நல்லவேளையாக விபத்து ஏதும் ஏற்படவில்லை. ஆனால் மீண்டும் இப்படி நடந்துவிடக்கூடாதே.. “ என்று கவலைப்பட்ட போலீசார் இப்போது, “பஸ் திருடனை” பிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.