பெங்களூரு: பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படும் என்று கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பிறகு முதலமைச்சர் எடியூரப்பா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மாநிலத்தில் மேலும் 6,000 புதிய பேருந்துகள் இயக்கப்படும்.
தற்போது, 6,491 பேருந்துகள் பெங்களூரு நகரத்தில் இயக்கப்படுகின்றன. குறைந்தபட்ச கட்டணமாக 12 ரூபாயாகவும், மாத சீசன் 925 ரூபாயாகவும் இருக்கிறது என்றார்.
பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படும் என்ற அறிவிப்பு, பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இது குறித்து அவர்கள் கூறி இருப்பதாவது: கட்டணத்தில் 50 சதவீதம் முதலமைச்சர் எடியூரப்பா குறைப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.
உலகம் முழுவதும் பேருந்து கட்டணங்களில் மானியங்கள் இருக்கின்றன. ஏன் என்றால் போக்குவரத்துக்கு பதிலாக சுகாதாரத்தில் முதலீடு செய்யப்படுகிறது. மும்பை, டெல்லியில் இதுதான் தற்போது நடைமுறையில் இருக்கிறது.
பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படும் போது, கூடுதலாக பயணிகள் பயணிப்பர். அது போக்குவரத்து துறைக்கு அதிக வருமானத்தை தரும் என்றனர்.
முன்னதாக, பெங்களூருவில் 2017ம் ஆண்டு பேருந்து கட்டணங்களை குறைக்க கோரி பேரணி நடைபெற்றது. கட்டணத்தை குறைத்து, பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் பேரணியில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.