சென்னை,
பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி வழக்கை தலைமை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
தமிழக அரசு கடந்த 19-ம் தேதி பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. அரசியல் கட்சியினர் மட்டுமின்றி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில், பேருந்துக் கட்டணத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையை தொடர்ந்து தலைமை நீதிபதி கூறியதாவது, பேருந்து கட்டண விவர அட்டவணையை அனைத்து பேருந்துகளிலும் ஒட்டவேண்டும் என அரசுக்கு நீதிபதி அறிவுறுத்தியது. மேலும் `பேருந்துக் கட்டணத்தை நிர்ணயிப்பது நீதிமன்றத்தின் பணி அல்ல. அரசு நிர்வாகத்தில் நீதிமன்றம் எப்படி தலையிட முடியும். அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது.
இந்த பொதுநல மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தார்.