தருமபுரியில் இருந்து மேல்மருவத்தூர் சென்ற தனியார் பேருந்து விபத்தில் சிக்கியதில் 30 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
எட்டிபட்டி கிராமத்தில் இருந்து 186 பேர் கொண்ட குழுவினர் மாலை அணிந்து 3 தனியார் பேருந்துகளில் மேல்மருவத்தூருக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர்.
ஊத்தங்கரை அருகே சென்றபோது கடைசியாக சென்ற பேருந்து முன்னால் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முயற்சி செய்துள்ளது.
அப்போது திடீரென எதிரில் வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்ட நிலையில் அந்த பேருந்து வழுக்கிச் சென்று அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
52 பேர் பயணம் செய்த இந்த பேருந்து விபத்தில் சிக்கிய நிலையில் அதிலிருந்த 30 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்து குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்து காரணமாக திருவண்ணாமலை – கிருஷ்ணகிரி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.