சென்னை
வளிமண்டல சுழற்சியாக புரெவி புயல் நிலை கொண்டுள்ளதால் நாளை தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
சமீபத்தில் ஏற்பட்ட நிவர் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இந்த புயலால் ஏற்பட்டுள்ள வெள்ளம் வடியும் முன்னர் புரெவி என்னும் மற்றொரு புயல் தமிழகத்தை அச்சுறுத்தியது. இந்தப் புயல் பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையில் கடலைக் கடக்க உள்ளதாக சொல்லப்பட்டது.
மாறாக அந்த புயல் ஆழ்ந்த தாழ்வழுத்த மண்டலம் அதன்பிறகு தாழ்வழுத்த மண்டலம் என வலுவிழந்து மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்தது. தற்போது இது வளிமண்டல சுழற்சியாக அதே இடத்தில் நகராமல் உள்ளது. இந்த புரெவி புயல் வலு இழந்தாலும் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலை சென்னையில் சற்றே வெயில் தலை காட்டியது.
தென் மண்டல வானிலை ஆய்வுத்துறைத் தலைவர் பாலசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏற்கனவே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று அதே இடத்தில் வளிமண்டல சுழற்சியாக நிலைகொண்டுள்ளது.
இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 24 மணி நேரத்தில் நாளை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.