சென்னை
புரெவி புயல் தாக்கம் காரணமாகத் தமிழகம் எங்கும் தொடர் மழை பெய்து வருவதால் மீட்புப்படை தயார் நிலையில் உள்ளது.
வங்கக் கடலின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு புரெவி என பெயரிடப்பட்டுள்ளது. நேற்று மாலையில் இந்த புயல் திரிகோண மலையின் கிழக்கு திசையில் 140 கிமீ தூரத்திலும் கன்யாகுமரியின் வடகிழக்கில் 550 கிமீ தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.
இதையொட்டி இலங்கை திரிகோணமலை, மட்டக்கிளப்பு, அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று காலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து கடலும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. நேற்றிரவு இந்த புயல் திரிகோணமலை அருகே புரெவி புயல் கரையைக் கடந்தது. தற்போது இந்த புயல் பாம்பனுக்கு 50 கிமீ தொலைவில் உள்ளது. இது மணிக்கு 12 கிமீ வேகத்தில் பாம்பனை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது.
பாம்பனில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. தென் தமிழ்நாட்டு மாவட்டங்களில் மீட்புப்படை தயார் நிலையில் உள்ளது இந்த பகுதியில் 209 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
புயல் காரணமாக மரங்கள் விழுந்தால் அதை அகற்றத் தேவையான மின் ரம்பங்கள், ஜேசிபி இயந்திரங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த புயலையொட்டி தமிழகம் எங்கும் தொடர் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நாகை, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், தூத்துக்குடி, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை நகரில் நேற்று இரவு 10 மணிக்குப் பிறகு தொடங்கிய மழை இரவு முழுவதும் விட்டு விட்டுப் பெய்தது. குறிப்பாக, அம்பத்தூர், கிண்டி, ஈக்காட்டு தாங்கள், திருவான்மியூர், அடையாறு, நுங்கம்பாக்கம், வேளச்சேரி, பாரிமுனை, மெரினா கடற்கரை எனப் பரவலாக மழை பெய்த வண்ணம் உள்ளது.