டெல்லி: குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டுக்கூட்டத்தில் முதன்முறையாக உரையாற்றிய குடியரசு தலைவர் திரவுபதி முர்ம, ‘ஆத்மநிர்பர்’ மற்றும் அதன் மனிதாபிமான கடமைகளை நிறைவேற்றும் திறன் கொண்ட இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும் என கூறினார்.
நடப்பு ஆண்டின் நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் தொடங்கும் முதல் கூட்டத்தொடரானது குடியரசுத் தலைவர் உரையாற்றுவது வழக்கம் இன்று குடியரசு தலைவர் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவதுடன், நாளை நடப்பு ஆண்டுக்கான பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த பட்ஜெட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெறும்எ ன அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது.
நாட்டின் குடியரசுத் தலைவராக பங்கேற்றுள்ள திரௌபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவது இதுவே முதல் முறை ஆகும். அதாவது, நாடாளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்கள் முன்னிலையிலும் அவர் பேசுவது இதுவே முதல் முறையாகும். இதையடுத்து இன்று முற்பகல் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நாடாளுமன்றத்திற்கு 10.58க்கு வருகை தந்தார். அவருடன் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப்தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று நாடாளுமன்றத்துக்குள் அழைத்துச் சென்றனர்.
இந்த கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் குடியரசுத்தலைவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது பெருமை அளிக்கிறது என்றார்.
இதையடுத்து நாடாளுமன்ற கூட்டத்தில் குடியரசு தலைவர் முர்மு உரையாற்றினார். அப்போது, 2047க்குள், கடந்த காலத்தின் பெருமையுடன் இணைக்கப்பட்ட மற்றும் நவீனத்துவத்தின் அனைத்து பொன்னான அத்தியாயங்களையும் கொண்ட ஒரு தேசத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும். ‘ஆத்மநிர்பர்’ மற்றும் அதன் மனிதாபிமான கடமைகளை நிறைவேற்றும் திறன் கொண்ட இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார். நாளை நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிதிநிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 5வது நிதிநிலை அறிக்கை இதுவாகும். மேலும், அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் இருப்பதால் நிர்மலா சீதாராமன் முழுமையாக தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கை இதுவாகும்.
நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக நாளை பட்ஜெட்டுடன் தொடங்கும் கூட்டத்தொடர் வரும் 13-ந் தேதி வரை நடக்கிறது. பின்னர், மார்ச் 13-ந் தேதி முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை நடைபெற உள்ளது. நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விறுவிறுப்புகளுக்கு பஞ்சமிருக்காது என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம்.
எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம், ஹிண்டன்பர்க் அறிக்கை, பிபிசி ஆவணப்படம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப திட்டமிட்டுள்ளது. இதனால், நடப்பு கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. முன்னதாக, நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக்கட்சிகளுடன் மத்திய அரசு சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் நாடாளுமன்ற கூட்டத்தை சுமூகமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.