லக்னோ
உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள இடைத் தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சியும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைக்கப்போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உத்திரப் பிரதேசத்தில் கோரக்பூர் மற்றும் பூல்பூர் தொகுதிகளில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி காலியாக உள்ளதால் விரைவில் இடைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. கோரக்புர் தொகுதியில் கடந்த ஐந்து முறைகளாக உறுப்பினராக இருந்த பாஜகவின் யோகி ஆதித்யநாத் முதல்வரானதை ஒட்டி ராஜினாமா செய்துள்ளார். பூல்புர் தொகுதியின் கேஷவ் பிரசாத் மௌரியா துணை முதல்வரானதை ஒட்டி ராஜினாமா செய்தார்.
இதனால் இந்த இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இரு தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு வரும் மார்ச் 11ஆம் தேதி நடைபெறும் எனவும், மார்ச் 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையே கூட்டணி இருந்த நிலையில் காங்கிரஸ் இந்த இரு இடங்களுக்கும் தங்கள் வேட்பாளரை அறிவித்து விட்டது. அதே போல சமாஜ்வாதி கட்சியும் தங்கள் வேட்பாளரை அறிவித்து விட்டது.
இந்நிலையில் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவு அளித்து ஒரு புதிய கூட்டணியை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி உருவாக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இது வரப்போகும் 2019 பாராளுமன்ற இடைத்தேர்தலுக்கு ஒரு பரிசோதனையாக மாயாவதி கருதி உள்ளார் எனவும் சொல்லப்படுகிறது.
தனது ஆதரவு குறித்து இன்னும் மாயாவதியோ அவர் கட்சித் தலவர்களோ இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.