விசாகபட்டினம்

ரிலையன்ஸ் ஜியோவின் பாணியில்  பி எஸ் என் எல் ரூ. 700க்கு பிராட் பேண்ட், கேபிள் தொலைக்காட்சி மற்றும் லாண்ட் லைன் தொலைப்பேசி வசதியை வழங்கத் திட்டமிட்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஜியோ மொபைல் சேவையைக் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கியது. அந்த நிறுவனத்தின் குறைந்த கட்டணத்தால் பலரும் ஈர்க்கப்பட்டனர். இரண்டு ஆண்டுகளில் ஜியோ முதல் இடத்துக்கு வந்துள்ளது. இந்த வர்த்தகப் போட்டி காரணமாகப் பல மொபைல் சேவை நிறுவனங்களும் தங்கள் கட்டணங்களைக் குறைக்கும் நிலை  ஏற்பட்டது. ஜியோவுக்கு சமமாகக் கட்டணங்களைக் குறைத்ததால் ஒரு சில மொபைல் சேவை நிறுவனங்கள் கடும் நட்டத்தில் இயங்குவதாகக் கூறப்படுகிறது.

தற்போது ஜியோ நிறுவனம் தனது கிகா ஃபைபர் நெட் ஒர்க்கை அறிவித்துள்ளது. வரும் 5 ஆம் தேதி  முதல் சேவையைத் தொடங்க உள்ள ஜியோ கிகா ஃபைபர், தனது சேவையில் லாண்ட் லைன் தொலைப்பேசி, பிராட் பாண்ட் இண்டர்நெட் மற்றும் கேபிள் டிவி ஆகிய மூன்று சேவைகளை அளிக்க உள்ளது. இதற்கான கட்டணம் குறித்த அதிகாரப்பூர்வமான விவரங்கள் அளிக்கப்படவில்லை எனினும் தோராயமாக ரூ.700 ஆகலாம் எனக் கூறப்படுகிறது. எனவே ஜியோவின் போட்டியாளர்களும் இதே சேவைகளை அளிக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளன.

இவற்றில் முதல் கட்டமாக அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான  பி எஸ் என் எல் நிறுவனம் ஜியோ ஃபைபரைப் போல் ஒரு சேவையை அளிக்க உள்ளது. இந்த சேவை பீராட்பாண்ட் இண்டர்நெட், லாண்ட்லைன் தொலைப்பேசி, கேபிள் டிவி ஆகிய மூன்றையும் உள்ளடக்கும் எனவும் அதன் கட்டணம் ரூ.700 ஆக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை முதலில் விசாகப்பட்டினத்தில் தொடங்க உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக பி எஸ் என் எல் நிறுவனம் விசாகப்பட்டினத்தில் உள்ள  உள்ளூர் கேபிள் டிவி சேவை நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது. இவ்வாறு மூன்று சேவைகளையும் ஒருங்கிணைக்கத் தேவையான கட்டமைப்புப் பணிகளை பி எஸ் என் எல் மேற்கொண்டு வருகிறதாகத் தெரிய வந்துள்ளது. இந்த மூன்று சேவைகளையும் ஜியோ பாணியில் ஒரே கம்பி மூலம் அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.