டில்லி

அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.

அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. கடன் தொகை சமாளிக்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் மற்ற  தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல் நிறுவனத்துக்கு வருமானம் மிகவும் குறைந்துள்ளது. ஆகவே செலவைக் குறைக்க பி எஸ் என் எல் நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்தும் நிதிப் பற்றாக்குறை உள்ளது. கடந்த சில மாதங்களாக ஊழியர்களின் ஊதியமும் தாமதமாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில் பி எஸ் எப் எல் ஊழியர் தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில்,  “பி எஸ் என் எல் நிறுவனம் ஊதியத்தை வழங்க முடியாத நிலையில் உள்ளதால் ஆகஸ்ட் மாத ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை. இந்த வருடத்தில் இது மூன்றாம் முறை ஆகும். எனவே இன்று (03.09.2019 அன்று) பி எஸ் என் எல் ஊழியர்கள் நேரத்தில் ஊதியம் வழங்கக் கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

கடந்த மாதம் நிறுவனத்துக்கு வர வேண்டிய தொகைகள் பெரிய அளவில் வந்துள்ளது. எனவே தொலைத் தொடர்புத் துறை மற்றும்  பி எஸ் என் எல் நிறுவனம் ஆகஸ்ட் மாத ஊதியத்தைக் குறித்த நேரத்தில் வழங்கி இருக்க முடியும். அது மட்டுமின்றி ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட வேறு பல நிலுவைத் தொகைகளையும் அளித்திருக்க முடியும். ஆனால் நிர்வாகம் ஊழியர்களை விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. அதனால் ஊழியர்கள் மனதில் ஒரு அதிருப்தியை உண்டாக்கி விருப்ப ஓய்வு திட்டத்தில் சேர அவர்களை நிர்வாகம் தூண்டி வருகிறது.

மற்ற பல தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது பி எஸ் என் எல் நிறுவனத்துக்கு மிகக் குறைந்த அளவு கடன் உள்ளது. தற்போதைய நிதி நிலை சரிவு என்பது குறைந்த வருவாய் ஈட்டுவதால் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும் இதற்கு முக்கிய  காரணம் ரிலையன்ஸ் ஜியோவின் குறைந்த கட்டணங்கள் ஆகும். இந்த போட்டி நிறுவனத்தால் பி எஸ் என் எல் நிறுவன வருமானம் ரூ. 32000 கோடியில் இருந்து ரூ18000 கோடியாகக் குறைந்துள்ளது. இந்த குறைந்த கட்டணத்தால் பல தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டும் அரசு எவ்வித நடவடிக்கையும் ஜியோ நிறுவனத்தின் மீது எடுக்க வில்லை.

எனவே பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் மற்றும் அதன் அனைத்து கூட்டு இயக்கங்களும் ஏற்கனவே அரசு இந்த நிறுவனத்துக்குக் கடன் உதவி அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது நிறுவனத்தின் குறுகிய கால மற்றும் நீண்ட கால நிதி தேவைக்காக இந்த கடன் உதவி  அவசியம் தேவை ஆகும். ஏற்கனவே அரசு ரூ.1 லட்சம் கோடி கடனை 63 நாடுகளுக்கு அளித்துள்ளது. தற்போதைய நிலையில் அரசிடம் இருந்து பி எஸ் என் எல் நிறுவனத்துக்கும் கடன் உதவி செய்ய நிர்வாகம் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அத்துடன் ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.