டில்லி,

த்தியஅரசில் திமுகவை சேர்ந்த தயாநிதி மாறன் தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது பிஎஸ்என்எல் டெலிபோன் லைனை முறைகேடாக சன்டிவிக்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் காரணமாக அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

தயாநிதி மாறன் வீடு அமைந்துள்ள அடையாறு போட் கிளப் மற்றும் சன்டிவி அலுவலகம், கோபாலபுரம் வீடு ஆகிய இடங்களில் இருந்து 764 தொலைப்பேசி இணைப்புகள்  முறைகேடாக கொடுக்கப்பட்டதாக விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளதாக சி.பி.ஐ. தெரிவித்தது.

இதன் மூலம் சென்னை பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கும், எம்.டி.என்.எல். நிறுவனத்துக்கும் ஒரு கோடியே 78 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சி.பி.ஐ. கூறியிருந்தது.

இந்த வழக்கில், தயாநிதி மாறன், கலாநிதி மாறன் சகோதரர்கள் மற்றும் சென்னை பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாள ராக இருந்த பிரம்மநாதன், எம்பி வேலுச்சாமி ஆகியோர்மீது குற்றம்சாட்டப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. நிதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.