புதுடெல்லி:
இந்தியாவில் அரசு இணையதள சேவை வேகத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் அகண்ட அலைவரிசை எனப்படும் பிராட்பேன்ட் சேவையை தனியார்களும், அரசும் வழங்கி வருகிறது. ஆனால் தனியார் இணையதள சேவையின் வேகத்தை ஒப்பிடுகையில் அரசு இணையதள சேவை வேகம் மிகவும் குறைந்த அளவே உள்ளது. இதன் காரணமாக பொதுமக்களிடையே அரசு இணையதள சேவைக்கு ஆர்வமில்லாமல் உள்ளது.
இதுகுறித்து, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: இந்தியாவில் பிராட்பேண்ட் இணையதளத்தின் வேகம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, குறைவாகவே உள்ளது. இதனால் டவுண்லோடு செய்வதி்ல் தாமதம் ஏற்படுகிறது. நாட்டில் வயர்லெஸ் நெட்வொர்க் வேகமாக முன்னேறி வரும் நிலையில், பிராட்பேண்ட் இணைய வேகத்தையும் தரம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் குறைந்தபட்சமாக பிராட்பேண்ட் வேகம் 512 KBPS ஆகவே உள்ளது. இதை 4 மடங்கு வரை அதிகரித்து குறைந்தது 2 MBPS ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது என்று அமைச்சர் கூறினார்.