புதுடெல்லி: அரசு தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், தனக்கு வரவேண்டிய ரூ.700 கோடி நிலுவைத் தொகையை, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திடமிருந்து வசூலிக்க, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை நாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வாரத்திற்குள் அந்த முறையீடு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம், முன்னரே, தனது நொடித்துப்போன நிலையை அறிவித்து, தனது சொத்துக்களை ஒரு குறிப்பிட்ட காலஅளவிற்குள் விற்பதற்கு அனுமதிக்குமாறு கேட்டிருந்தது.
மேலும், எரிக்ஸன் நிறுவனத்திற்கு, ரூ.260 கோடியை நேரடியாக விடுவிக்குமாறு, 37 கடன் வழங்குநர்களுக்கு உத்தரவிட வேண்டி, மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை முன்னரே அணுகியிருந்தது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மார்ச் 19ம் தேதிக்குள், எரிக்ஸன் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய பணத்தை தரத் தவறினால், அனில் அம்பானி சிறைக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
– மதுரை மாயாண்டி