டில்லி
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்த ஊழியர்கள் இழப்பீட்டுக்கு நிதி திரட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது
அரசு தொலை தொடர்பு நிறுவனங்களான பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்துக்கு மட்டும் ரூ.14,492 கோடி செலவழித்து வருகிறது. இது இரு நிறுவனங்களின் மொத்த வருமானத்தில் 75% ஆகும். எனவே இந்நிறுவன ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட விருப்ப ஓய்வு திட்டக் கெடு கடந்த 3 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்த விருப்ப ஓய்வுக்கு 92,700 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம் நிறுவனங்களுக்கு சுமார் ரூ.9000 கோடி மிச்சமாகும் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு விண்ணப்பித்தோருக்கு இழப்பீட்டுத் தொகைகளை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அந்த இழப்பீட்டுத் தொகைக்குத் தேவையான நிதி திரட்ட நிர்வாகம் முனைந்துள்ளது.
இது குறித்து இரு நிறுவனங்களும் இணைந்து பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. கடந்த வாரம் நடந்த இயக்குநர்கள் சந்திப்பில் நிறுவனங்களிடம் உள்ள அதிகப்படியான நிலம், கட்டிடங்கள், கோபுரம், ஃபைபர் இணைப்புகள் உள்ளிட்டவை கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சொத்துக்களை விற்பனை செய்ய நிர்வாகம் திட்டமிட்டுள்ளது இது குறித்து பங்குதாரர்களின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.