சென்னை: பிராட்வே பேருந்து நிலையத்தில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படுவதால், இந்த பேருந்து நிலையத்தை தற்காலிகமாக ராயபுரத்துக்கு மாற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னையின் மிக பழமையான பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையம் இருந்து வருகிறது. 1964ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்த இந்த பேருந்து நிலையத்திலிருந்து, ஆரம்ப காலகட்டத்தில் தென் மாவட்டங்கள் தொடங்கி பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. பின்னர், இடம் பற்றாக்குறை காரணமாக, அங்கிருந்து செல்லும் வெளியூர் பேருந்துகள் கோயம்பேட்டுக்கு மாற்றப்பட்டது. தற்போது கோயம்பேடு பேருந்து நிலையத்தையும் மூடிவிட்டு வெளியூர் பேருந்துகள் செல்லும் முனையாகமாக கிளாம்பாக்கம் செயல்பட்டு வருகிறது.
மேலும் மெட்ரோ ரயில் நிலையமும் அமைக்கப்பட்டதால், பிராட்வே பேருந்து நிலையம் மாநகர பேருந்துகள் வசதிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட வந்தது. மேலும் அருகே கொத்தவால்சாவடி மற்றும் மலர் சந்தைகள் இருப்பதால் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால், தற்போது செயல்பாட்டில் உள்ள பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு புதிய பேருந்து நிலையம் அமைக்க தமிழ்நாடு முடிவு செய்துள்ளது.
அதன்படி பிராட்வேயில், ‘‘மல்டி மாடல் இன்டகிரேஷன்’’ என்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கப்பட இருக்கிறது. அதாவது, பிராட்வே பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில், 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. அத்துடன், மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம் என அனைத்தையும் இணைக்கும் வகையில் 7 நடை மேம்பாலங்களும் அமைக்கப்பட உள்ளன.
கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் போது, பயணிகள் வசதிக்காக பிராட்வே பேருந்து நிலையத்தை தீவுத்திடலுக்கு மாற்ற சென்னை மாநகராட்சி ஏற்கனவே திட்டமிட்டது. இதற்காக ரூ. 5 கோடியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், , தற்போது வரை இந்த தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தான், தீவுத்திடலுக்கு பதிலாக பிராட்வே பேருந்து நிலையத்தை ராயபுரம் என்ஆர்டி மேம்பாலம் அருகே தற்காலிமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்திற்கு சொந்தமான இடத்தில் இந்த தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டரும் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி கூறுகையில், ‘‘தீவுத்திடலில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே, ராயபுரம் அருகே சென்னை துறைமுகத்திற்கு சொந்தமான இடத்தில் பிராட்வே பேருந்து நிலையம் தற்காலிகமாக அமைக்கப்படுகிறது. இதற்கான டெண்டர் அக்.4ம் தேதி கோரப்பட்டது. இம்மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் 45 குடும்பங்களை இடமாற்றம் செய்யவும் இடம் கண்டறியப்பட்டுள்ளது. தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பதற் கான டெண்டர் வரும் 5ம்தேதி தொடங்குகிறது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும்.
1,400 ச.மீ. பரப்பளவில் 57 பேருந்துகளை நிறுத்தும் வசதியுடன் பேருந்து நிலையம் அமைய உள்ளது. பயணிகள், பேருந்துகள் இடையூறின்றி வந்து செல்ல 3 நுழைவு பாதைகளுடன் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. பயணிகளின் வசதிக்காக காத்திருப்பு பகுதி, கழிவறைகள், டைம் கீப்பர் அறை, குடிநீர், இருக்கை வசதி, மேற்கூரைகளுடன் தற்காலிக பேருந்து நிலையம் அமைய உள்ளது’’ என்றார்.