பிரிட்டன் குவாரி ஒன்றில் 166 மில்லியன் ஆண்டுகள் பழமையான நூற்றுக்கணக்கான டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தெற்கு இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்ஷயர் எனும் இடத்தில் உள்ள இந்த குவாரியில் ஜுராசிக் காலத்து மெகாலோசோரஸ் போன்ற ராட்சத டைனோசர்கள் நடந்து சென்றதற்கான 5 வழித்தடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

ஒரு நெடுஞ்சாலை போன்ற இந்த பாதையில் நூற்றுக்கணக்கான டைனோசர்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த 5 தடங்களில் நான்கில் நீண்ட கழுத்து கொண்ட சௌரோபோட்கள் எனப்படும் தாவரங்களை உண்ணும் டைனோசர்கள் இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மற்றொன்றில் வேட்டையாடும் வகையைச் சேர்ந்த மெகாலோசோரஸ் எனும் மாமிசம் உண்ணும் டைனோசரஸ் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இதில் ஒரு பாதை மட்டும் மிகவும் நீளமாக அதாவது சுமார் 150 மீட்டர் நீளமுள்ளதாக இருக்கிறது.

இவ்விரு வகையான டைனோசர்களின் கால்தடங்களும் ஒரு கட்டத்தில் ஒன்றை ஒன்று முந்தி செல்லுவது போல் இருப்பதை அடுத்து இது எவ்வாறு தொடர்பு கொண்டது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த ‘ஜுராசிக் ஹைவே’ 200 ஆண்டுகால டைனோசர் அறிவியல் மற்றும் பொதுமக்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.